Thursday, September 26, 2013

பெண்ணே! எழும்பிப் பிரகாசி! (தெபோராளின் வாழ்விலிருந்து ஒரு பிரதிபலிப்பு)

"கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்" (லூக்கா 4:18‍-19)
இயேசுக் கிறிஸ்துவின் இந்த அவருடைய‌ஊழியத்திற்கானஅறிக்கை இன்று பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரு சேர பொருந்தும்.

உள்ளிருந்து வந்த ஒடுக்குதல்
ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்.ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்; (நியாயாதிபதிகள் 4:1-2).(ஜனங்கள்) நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம்  வாசல்வரையும் வந்தது (5:8). தெபோராளின் நாட்களில் உள்ளிருந்த வந்த ஒடுக்குதலின் காரணம் இஸ்ரவேல் மக்களின் பாவமேயாகும்.

“கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.” என்று நாம் அறிவோம் (சங்கீதம் 33:12). விக்கிரக வணக்கத்தை மையமாகக் கொண்டுள்ள நிர்பாக்கியமுள்ள நமது தேசம் சந்திக்கப்பட வேண்டும். எனவே நமது தாயகத்தில் நமது தலையான கடமை ஆண்டவரைப் பற்றி அறியாதோருக்கு அவரை அறிவிப்பதேயாகும்.

வெளியிலிருந்து வந்த ஒடுக்குதல்
தெபோராளின் நாட்களில் இஸ்ரவேல் ஜனங்கள் கானானியப் படையால் ஒடுக்கப்பட்டார்கள். (அதனால்) பெரும்பாதைகள் பாழாய்க் கிடந்தது; வழி நடக்கிறவர்கள் பக்கவழியாய் நடந்தார்கள் (5:6). "இந்தியாவில் என்று  பெண் ஒருத்தி அதன் தெருக்களில் பாதுகாப்போடு நடக்க முடியுமோ அன்று தான் இந்தியா சுதரந்தரமடைந்தாக கருதப்படும்" என்ற காந்தியின் கனவு இன்னும் நனவாகவில்லை. இஸ்ரவேலரிடம் ஒன்றும் இல்லாத நிலையில் அவர்கள் எதிரிகளிடம் 900 இரும்பு இரதங்கள் இருந்தன. அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள். கர்த்தரின்பதில் என்ன? தெபோராள். ஒரு பெண் நியாயாதிபதி. தலைவி. புரட்சித் தாய்! அவள் சொல்கிறாள்: "தெபொராளாகிய நான் எழும்புமளவும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்புமளவும், கிராமங்கள் பாழாய்ப்போயின." (5:7)

அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்."(17:6) இன்று இந்தியாவில் பெண்களின் நிலை, அன்று நியாயாதிபதிகளின் நாட்களில் நடந்தது போலவே உள்ளது. அநேக பெண்கள் சரீரத்திலும், மனதிலும் சித்ரவதைக்குள்ளாகிறார்கள். பெண்கள் பாலுணர்வு பொம்மைகளாக கருதப்படுகிறார்கள். ஒரு பெண் ஒரே சமயத்தில் பலரால் கற்பழிக்கப்பட்ட பல செய்திகளை நாம் அறிவோம். கருவறையிலிருந்து கல்லறை வரை பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை.

மகளிரின் மாட்சி
தேவையுள்ள சூழ்லிலையிலிருந்த இஸ்ரவேல் தேசத்தை வழிநடத்த தெபோராள் எழும்பினாள். பாராக்கையும் இன்னும் எண்ணற்ற வீரரையும் எதிரிகளிடம் போர் தொடுக்க தூண்டினாள். இன்றும் கூட நாம் பெண்களும் ஆண்களுமாகஇணைந்து செயல்பட வேண்டும். சகோதரி, இறைபணியில் உங்களை ஊக்குவிக்கும் ஆண்கள் (தகப்பன்/கணவன்/போதகர் இருப்பாரானால் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். இல்லையென்றால் ஆண்டவர் உங்களுக்கு வழி திறக்க ஜெபியுங்கள். நாம் யோசித்திராத வழிகளை அவர் திறந்து தருவார். நாம் எல்லாரும் கட்டாயமாக செய்யக்கூடிய காரியம் என்னவென்றால் நம் வசம் உள்ள ஆண் பிள்ளைகளை லப்பிதோத்துவைப் போல, பெண்கள் தங்கள் தாலந்துகளையும், வரங்களையும் உபயோகிக்க ஊக்குவிக்கிறவர்களாக‌ வளர்ப்பது ஆகும்.

பெண் ஒருத்தி  இறை வார்த்தையை கேட்டு பிறருக்கு அருள முடியுமா? தெபோராள், மிரியாம், உல்தாள், பிலிப்புவின் குமாரத்திகள், கொரிந்து திருச்சபையில் இருந்த பெண் தீர்க்கர்கள் அப்படிப்பட்டோரே ஆவர்.  அவர்கள் தேசத்திற்கும், சபைக்கும் இறை வார்த்தையை கொண்டு வந்தார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கர்த்தர் சொன்னது: "அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்." (யோவேல் 2:28-29). நாம் தியானிக்கும் இக்கதையில் இஸ்ரவேல் நாடு ஒடுக்கப்படுகையில் அதற்காக கடவுள் அளித்த‌ தீர்வு ஒரு பெண்ணேயாகும். நமது நாட்டிலும் ஒரு பெரிய மாற்றத்தை பெண்கள் கொண்டு வரக் கூடும்.

ஒன்றுமே செய்யாதிருத்தல் பாவமே
போர்க்களத்தில் தெபோரளை சேராமலிருந்த கோத்திரத்தாரை கர்த்தர் சபிக்கிறதை நாம் காண்கிறோம். "மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லை; பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லையே." (5:23. தேசத்திற்க்காக ஒன்றும் செய்யாதிருப்பது சாபமே! "நான் என் சகோதரனுக்கு காவலாளியோ?" என்று கேட்ட காயீனைப் போல நாம் இருக்க முடியாது. கர்ததர் நம்மைப் பார்த்து சொல்கின்றார்: "நீ உன் சகோதரிக்கு காவலாளி!" "செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள்." என்று தேசத்த்திற்கு தொண்டு புரிந்த மற்றும் ஒருக் கூட்டத்தைப் பற்றி வேதம் சொல்கின்றது (5:18)பல்வேறு தியாகங்கள் புரிந்து சிறப்பாக பணியாற்றி வரும் நம் மிஷனெரி குடும்பங்கள், மற்றும் சுதேஷ ஊழியர்களுக்காக ஆண்டவரைத் துதிக்கிறேன்.

யுத்தம் கர்த்தருடையது
யுத்தம் எப்பொழுதுமே கர்த்தருடையது! நாம் பிரசங்கங்களிலும் ஞாயிறு பள்ளிகளும் அடிக்கடி "செங்கடல்" சம்பவத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறோம். தெபோராளின் நாட்களில் அதேப் போன்ற சம்பவம் நடந்தது பற்றி நம்மில் எத்தனை பேர் அறிவோம்? ஏற்கன்வே நலிந்து போன இஸ்ரவேல் மக்கள் கூட்டத்தை நோக்கி 900 இரும்பு ரதங்களை ஓட்டிக் கொண்டு எதிரிப் படையினர் வருவதைக் கற்பனை செய்து பாருங்கள். ஆனால் எதிரிப் படைத் தலைவனுக்கு ஒரு காரியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாளின் யுத்தம் தெபோராளுடையதும் இல்லை, பாராக்குடையதும் இல்லை. அது தேவனுடையது என்று! மட்டுமல்ல எதிர்பாராத சுனாமி ஒன்று வரும் என்று அவன் சிறிதேனும் நினைக்கவில்லை. கீசோன் ஆறு எதிரிப் படைகளை அடித்துச் சென்றது என்று வேதம் சொல்கின்றது (5;21. எதிரி தளபதியை யாகேல் என்னும் பெண்ணின் வீட்டிற்கு செல்ல வைத்து அந்த நாளின் கடைசி வெற்றியையும் ஒரு பெண்ணுக்குத் தர வேண்டும் என்பது இறைத்திட்டமாயிருந்தது.

இறை பெண்களே, சமுதாயத்தை ஆக்கப்பூர்வமாக தாக்கம் செய்யும் பணிக்கு நம் பங்கேற்பையே ஆண்டவர் எதிர்பார்க்கின்றார். தெபோராளைப் போல இறைப்பணிக்கு நாம் நம்மை அர்ப்பணிக்கும் போது அவர் நமக்காக யுத்தம் செய்வார்பெண்ணே, எழும்பு! கர்த்தரை முன் வைத்து செயல்படும் நேரம் இது!