வேதத்தில்
எஸ்தரின் புத்தகம் முழுவதிலும் இறைவனின் பெயர் வெளிப்படையாக சொல்லப்படவில்லை.
ஆனால் உள்ளார்ந்தமாக அவரின் வல்ல செயல்கள் புத்தகம் முழுமையும் நிறைந்துள்ளன. இதை
விளக்க நான் எடுத்துள்ள முயற்சியானது இறை ஞானம் செரிந்த தங்கப் புதையல் போன்ற
இப்புத்தகத்தில் ஒரு சிறிய கண்ணோட்டமாகும். நம்மில்
அதிகமானோர் அறிந்துள்ள இக்கதையில் மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள்
பதிவாயுள்ளன. அதில் ஒருவர் கதையின் கடைசி காட்சிகளின் போது உயிருடன் இல்லை. அந்த
நபரைத் தான் நாம் முதலில் காண வேண்டும். ஏனென்றால் அந்நபர் தான் இக்கதைக்கு
சுவாரஸ்யத்திற்குக் காரணர்.
பிரச்சனையான
ஆமான்
வெளிப்படையாக
ஆமான் கொண்டு வந்த பிரச்சனை அரண்மனை வாசல் காத்த மொர்தெகாய் மீது போன்று
தோன்றினாலும் உள்ளார்ந்தமாக ஒரு நாட்டினர் மீதும், யூதர் என்னும்
பெருவாரியான மக்கள் கூட்டம் மீதுமாகும் (3: 5-6, 4:1-3) இன்றும் நம்முடைய போராட்டம் மாம்சத்தோடும்
இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும்,
அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும்,
வானமண்டலங்களிலுள்ள
பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் ஆகும்(எபேசியர் 6:12). இம்மாதத்தில் நாம் நம் தேசம் அந்நிய
ஆளுநர்களிடமிருந்து விடுதலைப் பெற்ற நாளை கொண்டாடுகிறோம். இன்று நாம் உண்மையாகவே
விடுதலைப் பெற்றிருக்கிறோமோ என்பது கேள்விக்குறியாயிருக்கிறது. பெரும்பான்மை
மதப்பிரிவினர் சிலரிடமிருந்து கிறிஸ்தவருக்குப் பிரச்சனகள் அதிகம் எழும்பிக்கொண்டிருக்கிறது. பவுலைப் போல நம் விசுவாசத்திற்கான நல்ல போராட்டத்தைப் போராட
ஆயத்தமாயிருக்கிறோமா? கிறிஸ்தவருக்கு
எதிரான ஆமானின் சதித் திட்டங்களை நாம் எவ்வாறு மேற்கொள்ளப்போகிறோம்?
திறமையான
மொர்தெகாய்
யூதருக்கு
விடுதலைப் பெற்றுத் தரக்கூடியத் திறன் மொர்தெகாயிடமிருந்தது. எஸ்தருக்கு ஏற்ற
சமயத்தில் அவன் கொடுத்த ஆலோசனை வெள்ளித்
தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்கு சமானமாயிருந்தது (நீதிமொழிகள் 25:11. மொர்தெகாயின் வளர்ப்பு மகளான எஸ்தர் ஏற்கனவே
அவன் சொற்கேட்டு நடந்து வந்து கொண்டிருந்தவள். ஆமானின் சதித்திட்டத்தை மேற்கொள்ள
அவன் எஸ்தரிடம் கூறிய ஆலோசனை என்ன? " நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று
உன் மனதிலே நினைவுகொள்ளாதே. நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு
இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும்
உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை
கிடைத்திருக்கலாமே, யாருக்குத்
தெரியும்?”
இதுவே நமக்கும்
இந்நாட்களிலில் இறைவன் கொடுக்கும் ஆலோசனையாகும். நாம் மவுனமாயிருக்க முடியாது.
நாம் செய்ய வேண்டியது இதுதான். அவர் நாமம் தரிக்கப்பட்ட நாம் நம்மைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, கர்த்தர் முகத்தைத் தேடி, நம் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது
பரலோகத்திலிருக்கிற அவர் கேட்டு,
நம் பாவத்தை மன்னித்து, நம் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பார் (2 நாளாகமம் 7:14). எஸ்தர் இதைத் தான்
செய்தாள்!
ஜெபித்த எஸ்தர்
யூதர்களின்
விடுதலைக்கான காரணத்தை ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால், அது "ஜெபம்" ஆகும். ஆலோசனக் கூறிய மொர்தெகாயிற்கு எஸ்தரின் பதில்
என்ன?"சூசானில் இருக்கிற யூதரையெல்லாம்
கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும்
குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக
சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன்!" என்பதாகும். ஒரு ஜெப இயக்கம் அவள் மூலம்
உருவானது. யேகோவாவின் நாமம் தடை செய்யப்பட்ட அரமனைக்குள் பெண்கள் ஜெபக்குழுவைத்
துணிந்து தொடங்கினாள். எஸ்தரின்
நம்பிக்கை ஜெபத்திலிருந்தது, அதுவும் கூட்டுப் பிரார்த்தனையில்!
தேசத்திற்காக
உபவாசித்து ஜெபிக்கும் ஆவிக்குரிய கலாச்சாரம் கிறிஸ்தவர்களிடம் குறைந்து
வருவதால் சபைகளிலும், நம் தேசத்திலும் பிரச்சனைகளும் அதிகமாகின்றது. விசுவாசத்திற்கான நல்ல
போராட்டத்தைப் போராட, காரியம் தலைகீழாய் மாற நாம் திருமறைக்குத்
திரும்பி நம் ஜெப முயற்சிகளை அதிகமாக்க வேண்டும். எஸ்தர் ஜெபத்தின் மூலம் வல்லமைப்
பெற்று இராஜாவின் தயையையும் பெற்றுக் கொண்டாள். நாமும் ஜெபத்தின் மூலம் இராஜாதி
இராஜாவின் தயையையும், நம் தேசத்தின் ஆளுநர்கள், அதிகாரிகள் ஆகியோரின் தயவையும் பெறுவோம். எஸ்தரின் சரித்திரக் கதையில்
பிரச்சனையைக் கொண்டு வந்த ஆமான் மாத்திரமல்ல அவன் குடும்பத்தினர், அவனை ஆதரித்தவர் அனைவரும் அழிந்து போனார்கள்.
படுகுழியை
வெட்டின ஆமான் தானே அதில் விழுந்தான்; கல்லைப் புரட்டின
அவன்மேல் அந்தக் கல் திரும்ப விழுந்தது (நீதிமொழிகள் 26:27). அவன் மொர்தெகாய்க்கு
ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் அவனையேத் தூக்கிப்போட்டார்கள் (எஸ்தர் 7:10).
கர்த்தர் எஸ்தருக்கும், ஆமானிற்கும், சாம்பலுக்குப்
பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுத்தார் (ஏசாயா 61:3). அவர்தம் பிள்ளைகளின் புலம்பலை ஆனந்தக் களிப்பாக
மாறப்பண்ணினார்; அவர்களின் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால்
இடைகட்டினார் (சங்கீதம் 30:11). இன்றும் தேவன்
நம் தேசத்தின் கடினமான சூழல்களைத் தலைகீழாக மாற்றித் தருவார். நம் குடும்பங்களை, சபைகளை, நாட்டை நம் நேரிய வாழ்வினாலும், ஜெபத்தினாலும் ஆசீர்வதிப்போம்.