ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். (சங்கீதம் 50:15)
என்னுடைய வீட்டில் வாலிப பருவத்தில் கண்ணாடியில் என்னைப் பார்க்கும் போதெல்லாம் அருகில் இந்த வசனம் சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்ததால் அதை என் மனம் உள் வாங்கிக்கொள்ளும். இந்த வசனத்தின் பயன்பாட்டை ஆகஸ்ட் 18, 1992 அன்று தத்ரூபமாக அனுபவித்தேன்.
பொறியியல் கல்லூரி முடித்தவுடன் என்னுடைய முதல் பணி சேலத்தில் ஆரம்பமானது. அன்று மாலை பணி முடிந்தவுடன் சேலத்திலிருந்து மேட்டூருக்கு பயணமானேன். இது தினசரி செய்யும் பயணமாகும். ஆனால் அன்றையத் தினம் அது ஒரு மறக்க முடியாத பயணமாகி விட்டது.
வெகு விரைவாக பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் எதிரே சடாரென்று ஒரு பாட்டி குறுக்கில் வந்ததால் தடுமாற அங்கே சைக்கிளில் சென்ற இருவர் மீது வண்டி பாய மீண்டும் தடுமாறி பாட்டியை விழத் தள்ள, உள்ளிருந்த எனக்கு பெரிய விபத்து என்று மாத்திரம் புலப்பட்டதே தவிர, அடுத்து தொடரும் பேராபத்தை சற்றும் அறியவில்லை.
பேருந்து ஒரு சிறிய பாலம் போன்ற ஒரு மேட்டில் வேகமாக மோத டீசல் டேங்க் உடைந்து பற்றாக்குறைக்கு பேருந்தில் அந்த நாட்களில் அந்த பகுதியில் வாழ்ந்த சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கென்று எரிபொருள்கள் இருந்திருக்க அனைத்தும் சேர்ந்து ஒரு வினாடியில் கூரை உயர நெருப்பை நான் காண முடிந்தது.
டீசல் டேங்கிற்கு மேலிருந்த இருக்கைகளிலிருந்து ஒவ்வொருவராக இருந்த வண்ணம் அலறிக் கணப்பொழுதில் கருகியதை கண்ட நான் அதற்கு சற்றே அருகில் வீழ்ந்திருந்தாலும் உயிர் தப்ப பிரயாசம் எடுத்தும் ஒன்றும் பயன் அளிக்காததால், ‘இயேசுவே காப்பாற்றும், இயேசுவே காப்பாற்றும்’ என்று கதறினேன். மரண ஓலத்தில் இந்த சத்தமும் எட்ட வேண்டியவருக்கு எட்டியதா?
அழகு வீண், படிப்பு வீண் என்ற எண்ணங்கள் பளிச்சிட, இயேசுவிற்காக ஒன்றும் அதிகம் செய்யவில்லையே என்ற ஏக்கமும் வர அந்த சமயத்தில் தானே அற்புதம் நடந்தது. என்னையும் அறியாமல் ஜன்னல் ஒன்றிற்குத் தூக்கி எறியப்பட்டேன். கண்ணாடியால் பாதி அடைக்கப்பட்ட அந்த ஜன்னலில் இரண்டு குறுக்கு சட்டங்கள் இருக்க என் தலை மாத்திரமே மாட்டியது. என் முழு உடலும் வெளியே வர முடியாது என்று என் மனம் சொல்ல அடுத்த வினாடி பேருந்திற்கு வெளியே ஒரு பாதுகாப்பான இடத்தில் ஒரு பொம்மை போல மென்மையாக நின்றேன்.
அது ஒரு அற்புதம் என்று உணர வெகு நேரம் எடுக்கவில்லை. “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்” (சங்கீதம் 91: 11, 12) என்னும் வசனங்களிற்கிணங்க தூதர்கள் தான் என்னைத் தூக்கி சுமந்திருக்க வேண்டும்.
மரித்தவர்களின் எண்ணிக்கையும், யார் யார் மரித்தார்கள் என்பதும் தெரிய வந்த போது எனக்குள் பல எண்ணங்கள் வந்தன. கள்ளங்கபடற்ற குழந்தைகள் மரித்திருந்தனர். என் கிறித்தவத் தோழி தன் குடும்பத்ததோடு கருகி விட்டாள். ‘கிரேஸ்’ என்ற என் பெயருக்கேற்றாற் போல தகுதியற்ற எனக்குக் கர்த்தர் கிருபை பாராட்டி உள்ளார் என்றும், அவர் தந்த இந்த பிச்சையான வாழ்வை அவருக்காக சிறப்பாக வாழ வேண்டும் என்றும் முடிவும் செய்தேன்.
ஒரு இறைபணியாளரைத் திருமணம் செய்து குடும்பமாக, பேராபத்திலிருந்து என்னைக் காத்த அந்த ஆண்டவருக்குப் பணி செய்வதும் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறாகக் கருதுகிறேன். ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக.