Friday, July 15, 2022

வேறே ஆடுகள்


 “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்” (யோவான் 10:16) என்று இயேசு கூறிய வார்த்தைகளில் ‘வேறே ஆடுகள்’ ‘ஒரே மந்தை’, ‘ஒரே மேய்ப்பன்’ என்னும் பதங்கள் சமீபத்தில் என்னை சிந்திக்கத் தூண்டின. அதன் விளைவே இந்த கட்டுரை.

பழைய ஏற்பாட்டில் வேறே ஆடுகள் – சில உதாரணங்கள்

அனைவரையும் உள்ளடக்கும் நல்லுள்ளம் கொண்ட தேவன், படைப்பில் அனைவரையும் அவர் சாயலில் படைத்தார். ஆண்களும், பெண்களும் ஆகிய நாம் அனைவரும்  பரிசுத்த ஜாதியே அன்றி இந்த ஒரே மந்தையில் வேறு எந்த பிரிவினையும் இருக்கக்கூடாது.

தேவன் யாக்கோபிடம் இவ்விதம் கூறினார்: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிலிருந்து உண்டாகும். (ஆதியாகமம் 35:11) இதன் நிறைவேறுதலை ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாற்றில் நாம் காணலாம். இந்த பட்டியலில் காணப்படும் தாமார் (கானானிய பெண்), ராகாப் (எரிகோவில் ஒரு வேசி), ரூத் (மோவாபிய பெண்), பத்சேபாள் (ஏத்தியனாகிய உரியாவின் மனைவி) ஆகியோரும் ‘வேறே ஆடுகள்’ தானே! தீர்க்கன் யோனா செல்ல விரும்பாத புறஜாதிகள் என்று கருதப்பட்ட நினிவேயினர் மனம் திருந்தினர். அவர்களும் வேறே ஆடுகள் தான்.

 புதிய ஏற்பாட்டில் - வேறே ஆடுகள் - சில உதாரணங்கள்

கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார் (லூக்கா 4:18-28) என்று இயேசு கூறிய தன் அருட்பணியின் சட்ட வாக்கியத்தில் அவர் எத்தனை வித விதமான வேறே ஆடுகள் குறித்துக் கூறுகின்றார்? இப்படிப்பட்டோரை நாம் தினமும் சந்திக்கிறோம் அல்லவா?

இதைத் தொடர்ந்து அவர் பழைய ஏற்பாட்டின் ‘வேறே ஆடுகள்’ குறித்தும் குறிப்பிடுகின்றார்: அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள். ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா (சாறிபாத்) ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல்  மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை.

ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு, எழுந்திருந்து, இயேசுவை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன? ‘வேறே ஆடுகள்’ குறித்த பாரத்தோடு செயல்படுவோருக்கு கட்டாயம் பிரச்சனை உண்டு எனபதும் தான்! பச்சை மரத்திற்கே இப்படிச் செய்தால் பட்ட மரத்திற்கு என்னதான் செய்யமாட்டார்கள்? (லூக் 23:31)

 தேவனை வணங்குவோர் (God Fearers) என்னும் வேறே ஆடுகள்

தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.  அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள். (அப்போஸ்தலர் 16:14,15) ஆதி திருச்சபையில் இந்த லீதியாள் போல தேவனை வணங்குவோர் என்னும் ஒரு கூட்டத்தினர் இருந்து வந்தனர். யூதரின் ஒரே தேவனை அவர்கள் பயத்தோடு வணங்கி வந்தனர். ஆனால் இவர்கள் விருத்தசேதனம், திருமுழுக்கு பெறாதவர். இவர்களை யூத விசுவாசிகள் ஏற்றுக்கொள்ளாததை லீதியாள், “நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால்’ என்று கூறியதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

லீதியாள் போன்ற இப்படிப்பட்ட ‘வேறே ஆடுகளின்’ கூட்டத்தில் அப்போஸ்தலர் புத்தகத்தில் நாம் காணும் எத்தியோப்பிய மந்திரி (8: 26-39) கொர்நேலியு போன்றோரும் அடங்குவர் (10:1,2). இவர்களைக் குறித்து பவுலும் “ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த இரட்சிப்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது” (அப் 13: 16, 26) என்று இயேசுவின் ஒரே மந்தைக்குள் அவர்களை இணைத்துக்கொள்ளுவதைப் பார்க்கலாம்.

ஆடுகளும் நாமே, மேய்ப்பரும் நாமே

‘என் ஆடுகளை மேய்ப்பாயாக’ (யோவான் 21: 15-17) என்ற இயேசுவின் அன்புக் கட்டளையை பெற்ற அப்போஸ்தலனாகிய பேதுரு நமக்கு கொடுக்கும் கட்டளை என்ன? “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.  அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.” (1 பேதுரு 5:2-4).

இந்த ஒரே மந்தைக்குள் நாம் கொண்டு வரும் ‘பிற ஆடுகள்’ நம் வாழ்வில் இன்று எத்தனை பேர்?