Thursday, April 6, 2023

தனிமை தேவ சித்தமல்ல!

தன்னை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் மரியாளின் முதல் பிள்ளையான இயேசு தன் பொறுப்பை, சிலுவையில், தன் வாழ்வின் இறுதியில் செயலாக்கம் செய்கின்றார்: அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். (யோவான் 19:26,27) 


நமக்கும் இதே கட்டளை தான்: பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது. (எபேசியர் 6:1-3) 

இரண்டு கேள்விகள்

1. அவருக்கு சகோதரர், சகோதரிகள் உண்டே! ஏன் யோவான்? 

யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இயேசுவின் சகோதரர் ஆவர்.  (மத்தேயு 13:55) குறைந்தது இரண்டு சகோதரிகள் அவருக்கு இருந்தனர் (மாற்கு 6:3). அவர்களைக் குறித்த மற்றுமொரு குறிப்பு:

 இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்துவந்தார். யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது. அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம். பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள். (யோவான் 7: 1-5)

காரணம்: அவர்கள் இன்னும் இயேசுவை அறிய வேண்டிய விதத்தில் அறிந்திருக்கவில்லை. 

 மேலும் இந்த வசங்களிலிருந்து கற்றுகொள்ளும் காரியம் ஒன்று உண்டு: திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். (லூக்கா 23:27-28)

இந்த வார்த்தைகள் மரியாளுக்கும் பொருந்தும். மரியாளும், குறிப்பாக யோசேப்பினால் அவள் பெற்ற மற்ற பிள்ளைகளும் முழு மனம் மாற்றம் பெற்றது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு பின்னர் தான். யாக்கோபு, யூதா என்னும் சகோதரர் அப்போஸ்தலர் பணி செய்து, அவர்கள் எழுதிய கடிதங்கள் தான் வேதத்தில் உள்ளன என்று கருதப்படுகிறது. 

 2. ஏன் ஸ்திரீயே (Woman) என்று அழைக்கிறார்? 

சிலுவையில் இயேசு தம் தாயை அவ்விதம் அழைக்கும் முன்னரே இந்த வேத குறிப்பு இருக்கின்றது: திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை. (யோவான் 2;3,4)

காரணங்கள்:

• மாதா வணக்கம் இருக்கக்கூடாது என்பதற்காகவோ? 

• 100 சதவீதம் மனிதன், 100 சதவீதம் தெய்வம் என்பதாலும் தான்! அவர் மனித குமாரனும், தேவ குமாரனுமாய் இருந்தார். 

• இயேசுவின் குடும்பத்திற்கான விளக்கமும் வித்தியாசமானதாக தான் இருந்தது. என்ன அது?

 இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். (மத்தேயு12:46 -50)

இயேசுவின் குடும்பம் பெரியது! அகலமானது! 

தனிமை தேவ சித்தமல்ல! 

 • குழந்தை இயேசுவிற்கு தாய் மாத்திரம் தேவை அல்ல, ஒரு குடும்பமும் தான். இதற்காக  தூதன் யோசேப்பை ஆயத்தம் செய்தான். அவனும் கீழ்படிந்தான். 

• இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? என்று சொல்லும் அளவு யோசேப்பின் தகப்பன் என்னும் பங்களிப்பு சிறப்பாக இருந்திருக்கிறது. 

• அனாதை, வேசியின் பிள்ளை போன்ற சொற்றொடர்கள் இறைவனுக்கு பிடிக்காதவை. வேசியின் பிள்ளை என்று கருதப்பட்டு, எள்ளி நகையாடப்பட்ட யாபேசின் விண்ணப்பத்தை கர்த்தர் கேட்டு அவனை அதிகம், அதிகமாய் ஆசீர்வதித்தாரல்லவா? (1நாளாகமம் 4: 9,10) 

• விதவைகளுக்கும் பராமரிப்பு வேண்டும். எ. கா: ரூத்தின் சரித்திரம் 

• விதவைகள் மேல அக்கறை உள்ளவர் நம் தேவன்! பழைய, புதிய ஏற்பாட்டில் எத்தனை வசனங்கள் இது குறித்து வாசிக்கின்றோம்! 

• குடும்பங்களில் வயதான பெற்றோரை, குறிப்பாக, விதவைகளை (widowers too) கவனிப்பதும், பராமரிப்பதும் மிக அவசியம். 

• பெரிய குடும்பமாகிய சபை, சமுதாய குடும்பங்களும் தனித்திருப்போரை பராமரிப்பது மிக மிக அவசியம்.

இரண்டு  காரியங்கள்

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. (யாக்கோபு 1:27)

யாரை ஏற்றுக்கொள்ள போகிறோம்? யாரை விசாரிக்க போகிறோம் என்பதில்  நம் பக்தி அடங்கியுள்ளது.