Monday, May 9, 2011

விழுந்து போன விசுவாசி

மீனவனான பேதுரு அவன் தொழிலை விட்டு விட்டு இயேசுவின் சீடனானான். மீன் பிடித்துக் கொண்டிருந்தவனை மனுஷரை பிடிக்கும் ஆத்தும ஆதாயப் பணிக்காய் அழைத்தார் ஆண்டவர். பேதுரு வார்த்தையிலும், செயலிலும் துருதுருத்தவன். பல நாவறிக்கைகளை விட்டவன். கடல் தண்ணீரில் கடவுளைப் போல நடக்கப் பிரயாசப்பட்டவன். ஆனால் அவனுடைய குருவான இயேசுக் கிறிஸ்து கைது செய்யப்பட்ட போது, "இயேசுவா? அவர் யார் என்றேத் தெரியாது" என்று மறுதலித்து, சபித்து, சத்தியம் பண்ணினவன். அவன் ஒருவிழுந்து போன விசுவாசி. யோவான் 21ல் விழுந்து போன விசுவாசியான அவனை தூக்கியெடுத்த இறைவன் இயேசுவின் அன்பைக் காண்கின்றோம்.

மீனவன்
“கலிலேயாவில் எனக்காக காத்திருங்கள்,” என்று சொன்ன இயேசுவுக்கு கீழ்படியாமல், தன் நண்பர்களான சீடர் ஐவரைக் கூட்டிக் கொண்டு தன் பழையத் தொழிலாகிய மீன் பிடிக்கும் தொழிலுக்கு செல்கின்றான். இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் ஒரு மீன் கூட அவர்களால் பிடிக்க முடியவில்லை. பேதுரு, இயேசு தன்னை முதன் முதல் அழைத்த‌ சம்பவத்தை நினைவு கூர்ந்து பார்க்கின்றான் (லூக்கா 5). அப்போது கீழ்படிந்ததனால் தானே அவனால் வலை கிழிய மீன் பிடிக்க முடிந்தது. இப்பொழுதும் கரையில் நின்றுக் கொண்டிருந்த‌ இயேசுவின்  சொல்லுக்கு கீழ்படிந்து, வலை நிறைய மீன் பிடித்தார்கள். பேதுருவுக்கு மீண்டும் இயேசுவை முதன் முதல் பார்த்த  சம்பவம் நினைவில் வருகின்றது. மனிதர்களைப் பிடிக்க வேண்டியவன், இன்று மீன் பிடிக்க சென்றது ஏன்?

சில நாட்களுக்கு முன் இயேசுவை மறுதலித்ததால் இனி ஊழியத்திற்கு தகுதியில்லை என்ற குற்ற உணர்வா? துருதுருத்த பேதுரு மீண்டும் கடலில் குதிக்கும் சம்பவத்தை இங்கு காண்கின்றோம். "அற்ப விசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்?" என்று இதேப் போன்று முன் நடந்த சம்பவ த்தில் அன்போடு கடி ந்துக் கொண்டாரே. விசுவாசியான அவன் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த வேண்டிய மீனவன் என்பதை உணர்ந்துக் கொண்டான்.

விசுவாசிகளாகிய‌ நாமும் விசுவாசத்திலிருந்து பல வேளைகளில் விழுந்து போகிறோம். இன்றும் பல வகைகளிலே ஆண்டவர் நம்முடைய அழைப்பை நம் வாழ்வில் ஏற்படும் தோல்விகள், பழைய நினைவுகள், இன்னும் பல வழிகளில் நினைவுப்படுத்துகின்றார். விசுவாசிகளாகிய நாம் எல்லோருமே ஆத்துமாக்களுக்காகிய மீன்களைப் பிடிக்க வேண்டியவர்கள் என்பதை நினைவு கூற வேண்டும்.

மேய்ப்பன்
வ.9 ல் ஆண்டவர் பேதுருவுக்கும் மற்ற சீஷருக்கும் உணவைப் பரிமாற‌ கடற்கரையில் உணவோடு தயார் நிலையில் இருக்கிறார். வ.12ல் "வாருங்கள். போஜனம் பண்ணுங்கள்" என்கிறார். ஆண்டவருடைய அழைப்பையும், கரிசனையும் பாருங்கள். எல்லார் முன்னிலும் ஆண்டவரை மூன்று முறை மறுதலித்த பேதுருவை, அற்புதத்தைக் காண வைத்து, அருமையான 
போஜனத்தைக் கொடுத்து, அவனை ஆதி அன்பிற்கு கொண்டு வர பிரயாசம் எடுக்கிறார். அதனால் பேதுருவைப் பார்த்து, "இவர்களிலும் (மற்ற சீஷரைக் காட்டிலும்) அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?" என்றார். ஏன் இவ்வாறு கேட்கிறார்? இவன் மட்டும் தானே "உமக்காக ஜீவனையும் கொடுப்பேன்" என்று யோவான் 13:37 ல் முழங்கினான். "உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும் நான் ஒருக்காலும் இடறல் அடைய மாட்டேன்" என்று இவன் தானே சொன்னான்! (மத்தேயு 26:33)
"என் ஆட்டுக் குட்டிகளை மேய்ப்பாயாக" என்று ஒரு முறையும், "என் ஆடுகளை மேய்ப்பாயாக" என்று இரண்டு முறையும் அவர் கூறுகின்றார். ஆட்டுக் குட்டிகள் என்பது சிறு பிள்ளைகளையும், இளம் விசுவாசிகளையும் குறிப்பதாகும். மேலும் ஆண்டவர் இங்கு குறிக்கும் ஆடுகள், செம்மறியாடுகள் ஆகும். அவை அறிவில் குறைந்த பிராணிகள். எனவே பொறுமையோடு வழிநடத்தி பாதுகாக்க வேண்டும். எனவே நாம் தேவையுள்ளசிறு பிள்ளைகள், இளம் விசுவாசிகளின் சரீரத்துக்கும் ஆத்துமாவிற்கும் போஜனம் அளிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

சீடன்
சீடன் என்பவன் யார்? சில நடைமுறை காரியங்களையும் பேதுரு கற்றுக் கொள்வதை இங்கு பார்க்கின்றோம். பேதுரு சீடன் என்பதால் படப் போகிற பாடுகளை இயேசு முன்னுரைக்கின்றார் (வ.18). சீடனாகிய‌ அவனுக்கு வாழ்க்கை என்பது வசதியான மெத்தை அல்ல என்றும் அவன் எவ்வாறு மரணத்தை சந்திக்கப் போகிறான் என்பதையும் விளக்குகின்றார். கஷ்டமான மரணமும் மகிமையானதே (வ.19) என்று தெளிவுப்படுத்தியப் பிறகு, "என்னைப் பின்பற்றி வா" என்கிறார்.

பேதுரு இயேசுவிடம் அங்கு நின்று கொண்டிருந்த யோவானைக் கைக்காட்டி, "ஆண்டவரே இவன் காரியம் என்ன?" என்கின்றான். அவனுக்கு இலகுவான வாழ்க்கையோ என்று நினைத்துக் கேட்கின்றான். ஆனால் இயேசுவோ, "அதைப் பற்றி உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றி வா"என்று பதில் கொடுக்கிறார். வாழ்க்கையில் பாடுகள் மத்தியில் பரமனை மகிமைப்படுத்தி, இறுதியாக‌ தலைகீழாக சிலுவையில் தொங்கி மரித்தான் பேதுரு!

கிறிஸ்தவர் ஒவ்வொருவரும் 'சீடராக" வாழ வேண்டும். சீடர் என்பவருக்கு கஷ்டமான நிலைமைகள் வரும். கஷ்டமான சூழ்நிலையில் நாம் என்ன பேசுகிறோம், எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை குழந்தைகளும், அவிசுவாசிகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போஸ்தலர் 15:22 ல், சீடர் என்பவர் அநேக உபத்திரவத்தின் வழியாய் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதைக் குறித்து வேதம் சொல்லுகின்றது.

 பல சூழ்நிலைகளால், விசுவாசத்திலிருந்து வழுவி விழுந்து போயிருக்கிற‌ விசுவாசியைப் பார்த்து இயேசு இன்று, "நீ இன்னமும் என்னில் அன்பாய் இருக்கிறாயா?' என்றுக் கேட்கின்றார். அவருக்கு நம் பதிலும், அதைத் தொடர்ந்த செயல்களும் என்னவாக இருக்கும்?

2 comments:

  1. Luke 9:62 came to my mind. He indeed gives us many chances

    ReplyDelete
  2. Yes Prason. Quite often Satan offers chances to us to "turn back" from our call. But God gives us more chances than that to make us "get back" to his fold. The song: "I have decided to follow Jesus...No turning back" means a lot in difficult situations.

    ReplyDelete