அவிசுவாசமல்ல, விசுவாசம்
வயது முதிர்ந்த நிலையியிலும் குழந்தை பாக்கியம் இல்லாதிருந்த ஆசாரியன் சகரியாவிடம், தேவதூதன் அவன் மனைவியாகிய எலிசபெத்து ஒரு அற்புத குழந்தையைப் பெற்றெடுப்பாள் என்று சொன்ன போது அவனுக்குள் அவிசுவாசம் தலைத்தூக்கி நின்றது. அவிசுவாசத்தின் உச்சக்கட்டமாக ஒரு அடையாளத்தை நாடுகின்றான். குழந்தை யோவான் பிறக்கும் வரைக்கும் அவன் ஊமையாகிப் போனதே அவன் அவிசுவாசத்திற்கு கொடுக்கப்பட்ட அடையாளமாகும் (லூக்கா 1).
கன்னியாக இருக்கும் போதே பரிசுத்த வித்துவினால் "இயேசு" என்னும் தெய்வக் குழந்தையைப் பெற்றெடுப்பாள் என்ற செய்தியை எலிசபெத்துவின் உறவின் முறையான மரியாள் என்னும் கிராமப் பெண் கேட்கின்றாள். "தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை" என்ற தூதனின் ஊக்க வார்த்தையையும் கேட்கின்றாள். "இதோ நான் ஆண்டவருக்கு அடிமை. உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது" என்று மரியாள் சொன்னதே அவளது விசுவாத்தின் அடையாளமாகும் (லூக்கா 1).
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபிரேயர் 11:1). ஆனால் அவ்வதிகாரத்தில் கூறப்பட்டுள்ள விசுவாச வீரர் பட்டியலில் கீழ்கண்டோரையும் காணலாம்: வாதிக்கப்பட்டவர்கள், நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தவர்கள், கல்லெறியுண்டவர்கள், வாளால் அறுப்புண்டவர்கள், பரீட்சைபார்க்கப்பட்டவர்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தவர்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்தவர்கள், குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தவர்கள். இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். இம்மைக்காக மாத்திரம் இயேசுவை விசுவாசியாமல் இருப்பதே உண்மையான விசுவாசமாகும் (1 கொரிந்தியர் 15:19).
பயமல்ல, தைரியம்
தேவ செய்தியை பெற்றுக் கொள்ள சகரியா, மரியாள், மேய்ப்பர் அனைவருமே பயந்தனர். இந்நிலைமையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இறைவாக்கு என்ன? "பயப்படாதீர்கள்." (லூக்கா 1:12-13, 29-30, 2:9-10).
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2 தீமோத்தேயு 1:7). மேலும், தேவன் அன்பாகவே இருக்கிறார்; நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக (தேவ) அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல (1 யோவான் 4:16-18).
நாம் ஏன், எதற்காக இன்று பயப்படுகிறோம்? நம்மில் எவரும் பாவம் செய்ய பயப்படவேண்டும் (நீதிமொழிகள் 8:13). மாறாக எதற்கு எடுத்தாலும் பயப்படக் கூடாது. அப்படிப்பட்டவர்களைப் பார்த்து, ஆண்டவர் கூறுகிறது என்ன? "நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்." (ஏசாயா 41:10).
பெருமையல்ல, தாழ்மை
தன்னைத் தவிர வேறு ஒரு ராஜா எழும்பக்கூடாது என்ற குறிக்கோளோடு செருக்கோடு செயல்பட்டான் ஏரோது மன்னன். ஆனால் அவன் செயல்களில் தோல்வியையே தழுவினான் (மத்தேயு 2). தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கும் இறைவன், மரியாளை, "கிருபை பெற்றவளே, வாழ்க" என்று அழைப்பதன் மூலம், மரியாளில் அவர் எதிர்பார்க்கும் தாழ்மை இருந்தது என்று அறிகிறோம். அவள் பாடியுள்ள பாடலின் வரிகளும் வரலாற்றில் செருக்கானவர்களை இறைவன் தள்ளி, தாழ்மையுள்ளவர்களை நோக்கிப் பார்த்ததையே உயர்த்தி உரைக்கின்றது (லூக்கா 1:46-55).
மேலும் மனுஷ சாயலில் ஒரு குழந்தையாக பிறந்து, நாம் படும் அவதிகளை ஈன சிலுவை பரியந்தம் அனுபவித்த இறைவன் இயேசுவையே தாழ்மையின் தலையான எடுத்துக்காட்டாக பவுல் உயர்த்திக் காட்டுகின்றார். ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணி, அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்க வேண்டும் என்று மனத் தாழ்மைக்கான விளக்கத்தையும் பவுல் தருகின்றார் (பிலிப்பியர் 2:1-11).
கிறிஸ்மஸ் கற்றுத் தரும் உண்மைகளை என் வாழ்வில் செயலாக்கம் செய்வதே கிறிஸ்துவில் மீண்டும் பிறந்த அனுபவமுள்ள என்னுடைய கடமை என்று உணர்கிறேன். கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்துவின் போதனைகள் நம்மை ஆட்கொள்ள விரும்புகிறேன்!
No comments:
Post a Comment