Wednesday, March 16, 2011

குறுக்குப் பாதையா? குறுகிய பாதையா?



நாம் வாழும் இவ்வுலகில் குறுக்குப் பாதையில் சென்று காரியம் சாதிப்பவர் பலர். வட்டிக்குப் பணத்தைக் கொடுத்தும், கள்ள வியாபாரம் செய்தும் "திடீர் பணக்காரர்" ஆவோரைக் குறித்து சத்திய வேதம் சொல்வது என்ன?

மத்தேயு 4:1-11 வசனங்களில் இயேசு கிறிஸ்து சாத்தானை மேற்கொண்ட முறைகளை ஆதாரமாக வைத்து இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் காணலாம். இச்சம்பவத்தில் இயேசு ஆவியானவராலே பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு வனாந்தரத்திற்கு கொண்டு போகப்பட்டார் என்று வாசிக்கிறோம். இதற்கு முந்தின அதிகாரத்தின் கடைசி வசனத்தில் பிதாவினால் இயேசுவிற்கு கிடைத்த புகழாரத்தையும் காணலாம்: "இவர் என்னுடைய நேசக் குமாரன். இவரில் பிரியமாயிருக்கிறேன்." "ஒரு மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை," என்பது இது தானோ?

சோதனை 1: 
குறுக்குப் பாதையில் உடலின் தேவைகளை ந்திக்கலாமா?

நாற்பது நாள் உபவாசம். மனித ரூபத்தில் வந்த தேவக் குமாரனாகிய இயேசுவுக்கு சரியான பசி.அவ்வேளையில் சாத்தான் அவரிடம் வந்து, "நீர் தேவனுடைய குமாரனானால், இந்த கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்," என்றான். இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? தான் தேவனுடைய குமாரன் தான் என்று நிரூபிக்க, யாரும் இல்லாத வனாந்தரத்தில் இயேசு கல்லுகளை அப்பங்களாகும்படி எளிதாகச் செய்திருக்கலாம். ஆனால் தனது உடலின் தேவைகளை சந்திக்க இயேசுவானவர் குறுக்குப் பாதையை தேர்வு செய்யாமல், குறுகிய பாதையை தேர்வு செய்து பசியோடிருந்தார். "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்," என்று பதில் கூறினார்.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது: ஒருவரும் பார்க்காத வேளையில், நம் உடலின் தேவைகளை சந்திக்க திருடுதல், பாலுணர்வுத் தவறுகளில் ஈடுபடுதல், வேசித்தனம் செய்தல் போன்றவை குறுக்குப் பாதையை தேர்வு செய்வதாகும். "ஜீவனுக்குப் போகும் பாதை இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கும். அதைக் கண்டுப்பிடிக்கிறவர்கள் சிலர்," என்று மத்தேயு 7:14 கூறுகின்றது. லாசரு பசியோடிருந்து குறுகிய பாதையில் சென்றாலும் மோட்சம் சென்றதாக வேதம் கூறுகின்றது. எனவே மரணமே நேரிட்டாலும், உடலின் தேவைகளை சந்திக்க குறுக்குப் பாதையை தேர்வு செய்யக் கூடாது.

சோதனை 2:
குறுக்குப் பாதையில் சாதனையை நாடலாமா?

மத்தேயு 4:5 ல், பிசாசு இயேசுவை தேவாலயத்து உப்பரிகையின் மேல் நிறுத்தி, "நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழ குதியும். ஏனெனில் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது பாதம் கல்லில் இடறாதபடி அவர்கள் உம்மை கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள்," என்று கூறினான். தேவ ஆலயத்தில் எல்லாரும் பார்க்கக் கூடிய இடத்தில், 'மேலிருந்து தாழக் குதிக்கும்' மாபெரும் சாதனையை இயேசு செய்திருக்கலாம். ஆனால்அற்புத மூர்த்தியானஅவர் அச்சாதனைக்காக் குறுக்குப் பாதையை நாடாமல், தம்முடைய பிதாவிற்கு மாத்திரமே கீழ்படிந்து அவர் வேளைக்குக் காத்திருந்தார். மேலும் வசனத்தை துர்ப்பிரயோகம் செய்த பிசாசை வசனத்தைக் கொண்டே சாடினார். "உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சைப் பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே," என்றார்.

வசனத்தை துர்ப்பிரயோகம் செய்து, நமக்கு நாமே தவறான  நெறிமுறையை வைத்துக் கொண்டு, படிப்பில், வேலை ஸ்தலத்தில் மற்றும் ஊழியத்தில் சாதனை புரிய காப்பியடித்து, இலஞ்சம் கொடுத்து, மற்றவர் வாழ்வைக் கெடுத்து- இது போன்ற‌ குறுக்குப் பாதைகளில் சென்று எல்லாரும் பார்க்கும் வண்ணம் சாதனைப் புரிவது தவறாகும். தானியேல்வேலை ஸ்தலத்தில் உண்மையாக இருந்ததனால் (தானியேல் 6:4) சிங்கக் குகையென்னும் குறுகிய பாதையில் சென்றான். ஆனால் கர்த்தர் அவனை ஏற்ற வேளையில் பிரதம மந்திரியாக உயர்த்தினார்!  எனவே சிங்கக்குகை போன்ற அனுபவம் நேரிட்டாலும், குறுக்குப் பாதையில் சென்று உலகறிய சாதனை பெற நாடக் கூடாது.

சோதனை 3: 
குறுக்குப் பாதையில் உயர் பதவியை நாடலாமா?

மத்தேயு 4:8-9 வசனங்களில் பிசாசு, இயேசுவை உயர்ந்த மலையின் மேல் கொண்டு நிறுத்தி, உலகத்தின் இராஜ்ஜியங்களைக் காட்டி, "நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னை பணிந்துக் கொண்டால், இவைகளை எல்லாம் உமக்குத் தருவேன்" என்றான். பிசாசு பொய்யன். தந்திரக்காரன். அவன் உலகத்தின் அதிபதியாக (யோவான் 16:11) இருந்தாலும், உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர் (1 யோவான் 4:4) என்பதற்கு நிரூபணமாக, "அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக" என்று இயேசு கூற சாத்தான் மறைந்து போகிறான்.

பதவியும், அந்தஸ்தும் வேண்டும் என்பதற்காக அரசியல்வாதி மற்றும் பெரிய மனிதர் காலில் விழுந்து குறுக்கு வழியில் பதவியை நாடி ஓடக் கூடாது. இயேசு பூமியில் வாழ்ந்த நாட்களில் குறுகிய பாதையையே தேர்வு செய்து, சொல்லொண்ணாப் பாடுகள் பட்டு தம்முடைய ஜீவனை சிலுவையில் ஈந்ததால் தான், தேவன் எல்லாப் பதவிக்கும் மேலான அதிகாரத்தை அவருக்கு கொடுத்தார் (பிலிப்பியர் 2:6‍‍-11). எனவே சிலுவைப் போன்ற கஷ்டம் வந்தாலும், குறுக்குப் பாதையில் சென்று பதவியை நாடக் கூடாது.

பிசாசின் வழி சுலபமானதும், அகன்றது போலக் காணப்பட்டாலும் அது கேட்டுக்குப் போகும் குறுக்குப் பாதையாகும். உத்தமமானதும், மேன்மையானதுமான  வேதத்தின் வழி கடினமாதானாலும், குறுகிய பாதையான அதையே தேர்வு செய்து, கர்த்தருக்குச் சித்தமானால் இவ்வுலகில் தானியேலைப் போன்ற மேன்மையையும், இல்லையெனில் லாசருவைப் போல கட்டாயமாக நித்தியத்தில் மேன்மையையும் பெறுவோம்.

4 comments:

  1. kurukku paadhai will lead us into the broad way

    -Prason Christopher Robin

    ReplyDelete
  2. Yes indeed Prason, unethical short-cuts lead us to hell...

    ReplyDelete
  3. //வேதத்தின் வழி கடினமானதானாலும், குறுகிய பாதையான அதையே தேர்வு செய்து, கர்த்தருக்குச் சித்தமானால் இவ்வுலகில் தானியேலைப் போன்ற மேன்மையையும், இல்லையெனில் லாசருவைப் போல கட்டாயமாக நித்தியத்தில் மேன்மையையும் பெறுவோம்.//

    ஆமேன்..அருமையான வார்த்தைகள்!! நன்றி சகோதரி

    ReplyDelete
  4. சகோதரன் விஜய், தங்களின் ஊக்கத்திற்கு நன்றி!

    ReplyDelete