யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் மரிக்க வேண்டும்-என்பது பலரது ஜெபமாக இருக்கும். வேதத்தில் ஒரு மனிதன் இவ்வாறாக ஜெபம் செய்தான்: "நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக." அவன் நீதிமானாக மரித்தானா? வேதத்திலே பலர் நீதிமான்களாக வாழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீதிமானாக மரிக்க ஜெபித்தவனைப் பற்றியும், நீதிமானாக வாழ்ந்த ஒரு சிலர் பற்றியும் வேதத்திலிருந்து காண்போம்.
"நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக" என்று ஜெபித்தவன் பிலேயாம் (எண்ணாகமம் 23:10). ஆனால் அவன் நீதிமானாக மரிக்கவில்லை." இஸ்ரவேல் புத்திரர் பாலாம் (பிலேயாம்) என்னும் குறி சொல்லுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப் போட்டார்கள்" என்று யோசுவா 13:22 கூறுகின்றது. அவன் மரித்து பல வருடங்கள் கழித்து பேதுரு அப்போஸ்தலன் "அநீதத்தின் கூலியை விரும்பினவன்" என்று பிலேயாமைப் பற்றிக் கூறுகின்றான் (2 பேதுரு 2:15). யூதா தான் எழுதிய சிறிய நிருபத்தில் பிலேயாமை "கூலிக்காக வஞ்சகம் செய்தவன்" என்றுக் குறிப்பிடுகின்றான் (வ்.11). பெர்கமு சபையிலே பிலேயாமின் தவறான கொள்கையை கைக்கொள்ளுகிறவர்களை இயேசுக் கிறிஸ்து வெறுப்பதாக யோவான் எழுதி வைத்துள்ளான் (வெளிப்படுத்தின விசேஷம் 2:14).
பிலேயாம் இயேசுக் கிறிஸ்துவின் முதல் மற்றும் இரண்டாம் வருகையைப் பற்றி முன் மொழிந்தவன் ஆவான் (எண்ணாகமம் 24:17). "யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும்" என்ற அவனது தீர்க்கதரிசனத்தை வைத்து, பாலன் இயேசுவை ஞானியர் காண வந்தனர் என்று வேத அறிஞர் கூறுகின்றனர். "பொய் சொல்ல தேவன் ஒரு மனிதனல்ல; மனம் மாற அவர் ஒரு மனுப்புத்திரனும் அல்ல," (23:19) என்று வசனம் பேசியவன் இப்பிலேயாம் தான். "யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை. இஸ்ரவேலுக்கு விரோதமான குறி சொல்லுதலும் இல்லை" என்று வல்லமையாக முழங்கினவனும் இவனே. அப்பேர்ப்பட்ட பிலேயாம், மோவாபிய ராஜாவாகிய பாலாக், இஸ்ரவேல் ஜனங்களை சபிப்பதற்காக பேசிய பணம், மற்றும் வசதிகளுக்காக அவர்களை பாவம் செய்ய வைக்கிறான். இதைப் பற்றி வெளிப்படுத்தின விசேஷத்தில் இயேசுக் கிறிஸ்துவே கூறுகின்றார். "விக்கிரகளுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும், வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாக போடும்படி பாலாக் என்பவனுக்கு பிலேயாம் போதனை செய்தான்"(வெளிப்படுத்தின விசேஷம் 2:14). இப்பாவங்களை செய்ததால் கர்த்தரிடத்திலிருந்து தண்டனைப் பெற்று, வாதையால் செத்த இஸ்ரவேல் புத்திரரின் எண்ணிக்கை 25,000 என்று வேதம் சொல்லுகின்றது (எண்ணாகமம் 25:9). "நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக" என்று ஜெபித்த பிலேயாம் நீதிமானாக வாழாமல், அவன் வாழ்ந்த காலம் துவங்கி ஆதித்திருச்சபையான பெர்கமு சபையின் காலம் வரை பலர் இடறிப் போக காரணமாகி விட்டான்.
நியாயத்தீர்ப்பின் நாளிலே, "கர்த்தாவே, கர்த்தாவே, உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோமல்லவா?" என்றுக் கேட்போருக்கு "நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை" (மத்தேயு 7:22,23) என்று இயேசுக் கூறும் நபர்களில் பிலேயாம் போன்றவர் அடங்குவர். பிலேயாம் வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்ன? ஒருவர் ஜெபிப்பதாலோ, தீர்க்கதரிசனம் உரைப்பதாலோ, வசன ஊழியம் செய்வதாலோ நீதிமானாக மாற முடியாது. நீதிமானாக மரிக்க நீதிமானாக வாழ வேண்டும் என்பதே உண்மையாகும்.
ஆபேல்
ஆபேலை இள வயதிலேயே அவன் சொந்த சகோதரனான காயீன் கொலை செய்து விடுகின்றான். அநியாயமாய் கொலை செய்யப்பட்ட இந்த ஆபேலை இயேசுக் கிறிஸ்து "நீதிமான்" என்றுக் குறிப்பிடுகின்றார் (மத்தேயு 23:35). எபிரேய புத்தக ஆக்கியோன், ஆபேல் காயீனை விட மேன்மையான பலியைச் செலுத்தினதாலே நீதிமான் என்று சாட்சிப் பெற்றதாக விளக்கம் கொடுக்கின்றான் (எபிரேயர் 11:4). அப்போஸ்தலனாகிய யோவானும் ஆபேலின் கிரியைகள் நீதியானவைகள் என்றுக் குறிப்பிடுகின்றான். பொல்லாங்கனால் உண்டாயிருந்து பொல்லாத கிரியைகள் புரிந்த காயீனைப் போல் இருக்க வேண்டாம் என்று நம்மை எச்சரிக்கின்றான் (1 யோவான் 3:12). காயீனுடைய வழியும், சபைகளிலே கள்ளப் போதர்களின் வழியும் நல்லதல்ல என்று யூதாவும் எச்சரிக்கின்றான் (யூதா 1:11).
இப்படியிருக்க, இச்சகோதரர் வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்ன? செயலில் நீதிமானாக வாழ்பவனே நீதிமான் அல்லவா? ஒருவனை நீதிமான் என்று மற்றவரும், குறிப்பாக ஆண்டவரும் சாட்சி கொடுக்க வேண்டும் அல்லவா?
நோவா
"இந்த சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்," என்று நோவாவைக் குறித்து ஆண்டவரே சாட்சிக் கொடுக்கின்றார் (ஆதியாகமம் 7:1). ஆதியாகம புத்தக ஆக்கியோனும், "நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்கே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்," என்று அறிமுகம் செய்து வைக்கின்றான் (6:9). எபிரேயப் புத்தக ஆக்கியோன் நோவா நீதிமானாக கருதப்பட்டதன் விவரத்தை இவ்வாறு கூறுகின்றான்: விசுவாசத்தினாலே நோவா......தேவ எச்சரிப்பு பெற்று பய பக்தியுள்ளவனாகி தன் குடும்பத்தை இரட்சிப்பதற்கு பேழையை உண்டு பண்ணினான். அதினாலே அவன்..... நீதிக்கு சுதந்தரவாளியானான் (எபிரேயர் 11:7). அப்போஸ்தலனாகிய பேதுரு, "நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா" என்று நோவாவை பிரசங்கியாராக விமர்சிக்கின்றான் (2 பேதுரு 2:5). உலகின் முதல் பிரசங்கியாரான நோவா, இவ்வுலகம் முழுவதையும் ஆதாயப் படுத்துவதில் தோல்விக் கண்டாலும் தன் சொந்தக் குடும்பத்தை ஆதாயப்படுத்திக் கொண்டான். அதினாலே அவன் நீதிமான் ஆகின்றான்.
இன்று உலகம் முழுதையும் ஆதாயம் பண்ணுவதில் நாட்டம் காட்டும் பலர் தங்கள் சொந்தக் குடும்பத்தை ஆதாயம் பண்ணிக் கொள்ள முடியாமல் போவது ஏன் என்று சிந்தித்துப் பார்ப்பது நலம். நீதிமானின் குடும்பம் அந்த நீதிமானால் இரட்சிக்கப்பட்டு நித்திய அழிவினின்று காக்கப்படும் என்பது நோவாவின் வாழ்வு நமக்கு கற்றுக் கொடுக்கும் உண்மையாகும். நீதிமானின் கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு (சங்கீதம் 118:15) என்பது உண்மையன்றோ?
முடிவாக தங்களை நீதிமான்களென்று எண்ணி, மற்றவர்களை அற்பமாக எண்ணுவதும் தவறாகும். அப்படிப்பட்டோருக்கு இயேசுக் கிறிஸ்துவின் தீர்ப்பு பற்றிய அறிவு அவசியம். அவர் நியாயப்பிரமாணம் முழுமையும் கைக்கொண்ட பரிசேயனை நீதிமான் என்று அழையாமல், "பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்" என்று ஜெபித்த ஆயக்காரனையே "நீதிமான்" என்று தீர்ப்பு செய்கின்றார் (லூக்கா 18:9௧4). இலவசமாய் கிடைக்கும் தேவ கிருபையை விசுவாசத்தினால் பெற்று, பாவத்திலிருந்து விடுதலைப் பெற்று பரிசுத்தமாய் வாழ்பவர்களே நீதிமான்கள். அப்படிப்பட்டோர் தான் நீதிமான்களாய் மரித்து நீதியின் கிரீடத்தைப் பெற முடியும். நீதிமானாக மரிக்க நீதிமானாக வாழ வேண்டும் அன்றோ?
ஆமென். வேதாகம தியான பகுதி: எண்ணாகமம் 24:17
ReplyDeleteAwesome Revelation of different of prayer in action.or faith in action
ReplyDeletePraise God!
Delete