Friday, February 27, 2015

ஒரு பெண்ணின் வாழ்வில் - விடியல் தந்த வெளிச்சம் ‍

சிலுவையின் கீழ் நின்று கொண்டிருந்த மரியாள் அடைந்த‌ வேதனையை வேறு எவரும் அடைந்திருக்கமாட்டார்கள். கண்ணெதிரில் அவள் மகனாகப் பெற்றெடுத்த இயேசு வேதனையில் துடிக்கின்றார். பழைய ஏற்பாட்டு சரித்திரத்தில் ஆகாரும் இதே சூழலில் தன் மகன் இஸ்மவேல் தன் கண் எதிரில் சாவதைக் கண்டுத் துடித்தாள். அவள் கண்ணீரைக் கண்ட தேவன் அவர்கள் இருவருக்கும் தேவையான தண்ணீரைத் தந்தருளினார். ஆனால் மரியாளின் சூழலிலோ அவள் அழுதும் இறைவன் மௌனமாக இருக்கிறார். இயேசு வேதனையின் உச்சக்கட்டத்தில், "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்றுக் கதறிய போது பதில் எதும் இல்லை. தன் மகவாகிய இயேசு இவ்விதமாக சிலுவையில் மரிக்க வேண்டும் என்பது இறைத் திட்டம் என்பதை புரிந்துகொள்ளுவதற்கு அவளுக்கு கடினமாக இருந்திருக்கும். சேவகன் இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தினபோது அது மரியாளின் இருதயத்தில் குத்தினது போலிருந்திருக்கும்." உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும்" என்ற தீர்க்கதரிசன வார்த்தையின் நிறைவேறுதல் இது தானோ? மரியாள் சிந்திக்கலானாள்.

தாயின் நினைவுப் பெட்டகம் விலையேறப்பெற்றது. இயேசு கிறிஸ்துவின் சிறு பிள்ளைப் பிராயத்தைக் குறித்து அதிகம் எழுதியிருக்கும் லூக்கா அந்த தகவல்களை அவர் தாயாகிய மரியாளிடம் பெற்றார் என்று பரவலாகக் கருதப்படுகிறது. இப்பொழுது சிலுவையின் அடிவாரத்தில் நின்று கொண்டிருக்கும் மரியாளின் சிந்தனைச் சிதறலில் பிள்ளை இயேசுவை அவளும் யோசேப்புமாகத் தேடியதும், ஆலயத்தில் மதத் தலைவர்களோடு அவர் சம்பாஷிப்பதைக் கண்டு பெற்ற இன்பமும் அவள் நினைவில் வந்திருக்கும். ஆனால் இப்பொழுதோ தன் குழந்தையின் உயிர் அணு அணுவாக அவரைப் விட்டுப்போகின்றதே தவிர, அவரைத் திரும்ப பெற முடியாது என்றே நினைத்திருப்பாள். மழலை இயேசுவின் புன்முறுவல்கள், குறும்புத்தனங்கள், மற்றும் வளர்ந்த நாட்களில் பெற்றோருக்கு அடங்கி இருந்ததும் நினைவில் வருகின்றதுஆனால் இன்றோ அக்கீழ்படிதலுள்ள பிள்ளை உதவியற்ற சூழலில் பரம பிதாவிற்கு மாத்திரம் கீழ்படிந்திருப்பது புரியாத புதிராக மரியாளுக்கு இருந்திருக்கும். தான் சொன்னதன் பின்னர் தண்ணீரை திராட்சரசமாக மாற்றின தன் பிள்ளை இப்பொழுதோ கொடிய குருசில் நாவறண்டு, "தாகமாயிருகிறேன்" என்று சொல்லுகின்றார்.

இந்த நேரத்தில் தன் தாயின் கண்ணீரை இயேசு காண்கின்றார். அவர் கரங்களில் ஆணிகள் அடிக்கப்பட்டிருந்ததால் அவரால் தாயை அணைக்க இயலாது. கண்ணீரைத் துடைக்க முடியாது. மெல்ல முனகுகின்றார்: ஸ்திரீயே, அதோ, உன் மகன்”. அவர் மனதுருக்கமுள்ள கண்கள் யோவான் பக்கம் திரும்புகின்றது: "அதோ, உன் தாய்" என்றார். இயேசுவின் சகோதரர் இன்னும் அவருடைய சீடராகாததால், யோவானத் தன் சகோதரன் ஸ்தானத்தில் தெரிவு செய்கின்றார். மரண வேதனையின் மத்தியிலும் இயேசுவின் அன்பும் பரிவும் கண்டு மரியாளின் கண்ணீர் பெருக்கெடுத்திருக்கும்.

தானும் தன் மற்றப் பிள்ளைகளுமாக ஒரு முறை இயேசுவை சந்திக்கச் சென்ற சமயம், அதிகமான ஜனக் கூட்டத்தினிமித்தம் அவளால் மகனிடம் செல்ல முடியவில்லை. பாவம்! அவள் எப்பொழுதும் தன் மகனை தூரத்திலிருந்து அழகு பார்க்கும் சூழல் தானிருந்தது. ஊழியத்தினிமித்தம் பிள்ளைகளைத் தொலைவிலிருக்கும் விடுதிகளில் விட்டிருக்கும் பெற்றோர், வேலை, திருமணம் போன்ற காரணங்களால் தங்கள் கூட்டை விட்டுப் பறந்து சென்றப் பிள்ளைகளை தூரத்திலிருந்து அழகு பார்க்கும் பெற்றோர், அருமையான பிள்ளைகளை இழக்கக் கொடுத்தப் பெற்றோர்,‍ எதிர்த்து பேசி  விரோதிகளாகப் பிள்ளைகளால் தள்ளி வைக்கப்படும் பெற்றோர்  போன்ற ஒவ்வொருவரின் உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் தேவன் இவர்!

அவரைக் காண ஆவலாயிருந்த தாய் மரியாளிடம் இயேசு சொன்னது என்ன? "என் தாயார் யார்? என் சகோதரர் யார்?” என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!  பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான்!" (மத்தேயு 12:48-50) அவ்வார்த்தைகள் மரியாளுக்கு கேட்கக் கஷ்டமாக இருந்திருக்கும். ஆனால் அவை குடும்பம் என்னும் வார்த்தைக்கான அகன்ற அர்த்தத்தை சிந்திக்க அவளைத் தூண்டியிருக்கும். இயேசுவின் அகராதியில் குடும்பம் சரீர வரையரையைத் தாண்டிய ஒன்றாகவேக் காணப்படுகின்றது. மரியாளுக்கு மேலும் சில வார்த்தைகள் நினைவுக்கு வந்திருக்கும். புலம்பி அழுகிற ஸ்திரீகள் (மரியாள் உட்பட!) அனைவரையும் நோக்கி இயேசு சொன்னது: "எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்." (லூக்கா 23:28)

மரியாளுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அவள் தனக்காகவும் தன் மற்றப் பிள்ளைகளுக்காகவும் அழுதாள். இயேசுவின் உயிர்த்தெழுந்த நாள் அவளுக்கு விடையளித்தது. தன் பாலகனான, ஆனால் இப்பொழுது, மரணத்தை வென்றத் தன் ஆண்டவராகிய இயேசுவை மீண்டும் பார்ப்பது அவளுக்கு எத்தனை ஆனந்தத்தை உண்டாக்கியிருக்கும்! அவளும், இயேசுவின் மற்ற சகோதரரும் தங்கள் இரட்சகராக பரிபூரணமாக‌ அவரை ஏற்றுக்கொண்ட பின் திருச்சபைத் தொண்டராக, தலைவர்களாக மாறினர்.
மரியாளைப் போன்றே நம் வாழ்விலும் பட்டயங்கள் ஊடுருவியிருக்கலாம். ஆனால் சிலுவையும், பட்டயமும் முடிவல்ல! உயிர்த்தெழுந்த இயேசுவை ஆண்டவராக ஏற்றிருப்போருக்கு வெற்றி நிச்சயம். அல்லேலூயா!