Friday, June 20, 2014

எனக்குள் ஒரு "யேசபேல்" இருக்கின்றாளா?


வேதாகமத்தில் இராஜாக்களின் புத்தகத்தில் யேசபேலின் வரலாற்றினை நாம் வாசிக்கின்றோம். அவள் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக் கொண்டதை இங்கு தொகுத்துள்ளேன்.

தீங்கிழைப்பதில் தீவிரவாதி
தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை (1 இராஜாக்கள் 21:25). மட்டுமல்ல, யேசபேல் பாகால் வழிபாட்டை இஸ்ரவேல் தேசத்தில் அதிகரிக்க செய்தவள் (1 இராஜாக்கள் 18:19). வேசித்தனங்களும், பில்லிசூனியங்களும், ஏராளமாய் புரிந்தவள் (2 இராஜாக்கள் 9:22). கர்த்தரின் தீர்க்கர்களை வேரறுக்க வீறு கொண்டு எழுந்தவள் (1 இராஜாக்கள் 18:4, 1 இராஜாக்கள் 18:13). மறு பக்கம், அவள் பந்தியிலே பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரும், தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரும் தினமும் விருந்து உண்டார்கள் என்று வேதம் கூறுகின்றது ( 1 இராஜாக்கள் 18:19).

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நீதிமானாகிய நாபோத்தின் மரணத்தை திட்டம் தீட்டியவள். அவள் கணவனான, இராஜாவான ஆகாப் ஒரு எளிய குடிமகனுக்கு சொந்தமான திராட்சத் தொட்டத்தை இச்சித்தான். அதை தர மறுத்த நாபோத்தை கொலை செய்ய யேசபேல், தன் கணவனின் பெயரால் நிருபங்களை எழுதினாள் (1 இராஜாக்கள் 21:8). வேதத்தில் பெண்களுள், ஆமானின் மனைவியாகிய சிரேஷும், சிம்சோனின் மனைவியாகிய தெலீலாளும், யேசபேலைப் போல‌ தீவினையிழைப்பதில் தீவிரவாதிகளே!

எந்த உறவுகளிளிலும் ஆதிக்கம் தவறான ஒன்றாகும். ஆதிக்கம் செலுத்தி தீவினை புரிவது அதிலும் கேடானது. ஆதிக்கமும், தீவினையும் ஒரு சேர இருந்தது யேசபேலின் அதிமோசமான குணமாகும். வேதம் இவ்விரண்டையும் எதிர்க்கின்றது. ஒருவரோடொருவருக்குள்ள உறவில் "தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்" (எபேசியர் 5:21) என்றே வேதம் கூறுகின்றது. மேலும் நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருங்கள் (2 தெசலோனிக்கேயர் 3:13) என்றும் வேதம் எடுத்து இயம்புகின்றது. ஆனால் யேசபேலோ தீமை செய்வதில் தீவிரம் காட்டினாள்.

பிடரியைக் கடினப்படுத்தியவள்
மெய்த் தேவனாகிய யெகோவாவின் வல்லமையை யேசபேல் பல முறை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் இருந்தது (1 இராஜாக்கள் 18:16-46). பஞ்ச நாட்களில் பாகாலால் மழையை கொடுக்க முடியவில்லை என்பதை அறிந்தவள். கர்மேல் பர்வதத்தில் பாகாலின் தீர்க்கர்களால் பலிபீடத்தில் அக்கினி கொண்டு வர முடியாததையும், எலியா ஒரு எளிய ஜெபத்தை செய்து அக்கினியை இறக்கியதையும் அவள் அறிந்தும் கடவுள் அவள் வாழ்க்கையில் இடைபட்டதை அலட்சியம் செய்தாள். "அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்" (நீதிமொழிகள் 29:1) என்பது உண்மையன்றோ?

விதைத்ததை அறுத்தவள்
கலாத்தியர் 6:7-8 சொல்கின்றது: "மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." எலியா தீர்க்கன் மூலம் அளிக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாக யேசபேல் மாத்திரமல்ல அவளுடைய குடும்பத்தினரும், சந்ததியாரும் அகோரமான மரணத்தை சந்தித்தனர். அவற்றில் சில: ஆகாப் (1 இராஜாக்கள் 22:37‍-38), யேசபேல் (2 இராஜாக்கள் 9:30-37), அவள் மகன் யோராம் (2 இராஜாக்கள் 9:25-26), அவள் குடும்பத்தினர் அனைவரும் (2 இராஜாக்கள் 10:1-17), அவள் மகள் அத்தாலியாள் (2 இராஜாக்கள் 11:15,16).

நமக்கு ஒரு கேள்வி: அறிக்கையிட்டு விட்டு விட வேண்டிய யேசபேலின் குணம் ஏதாவது நம்மில் காணப்படுகின்றதா?

"தன் பாவங்களை மறைக்கிறவன்(ள்) வாழ்வடையமாட்டான்(ள்) ; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ(ளோ) இரக்கம் பெறுவான்(ள்) .
" (நீதிமொழிகள் 28:13)

No comments:

Post a Comment