Tuesday, August 7, 2018

என் உள்ளம் கவர்ந்த ஒருவர்

என் திருமணத்தில், அம்மாவுடன்
எனக்கு இந்த அம்மாவை என் சிறு வயதிலிருந்தே தெரியும்.  நான் ஐந்து வயதாயிருக்கையில் என் வீட்டில் உதவி செய்ய அவர்கள் வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒரு குக்கிராமத்திலிருந்து அவர்கள் வந்திருப்பதை பின் நாட்களில் நான் தெரிந்து கொண்டேன்.

அவர்கள் வளர்ந்த அந்த கிராமத்தில் குளியல் சோப்பு என்றால் என்னவென்றே தெரியாதாம்!  மேட்டூர் என்னும் என்னுடைய சிற்றூரிலிருந்த ஒரே ஆண்கள் பள்ளியில் காவலாளியாக பணியாற்றியவரை திருமணம் செய்து அந்நாட்களின் நிகழ்வுகளை நகைச்சுவையோடு சொல்லக் கேட்டிருக்கிறேன். கணவனோடு முதல் முறை திரையரங்கிற்குச் சென்று கதாநாயகனும் கதாநாயகியும் அந்தரங்க நிகழ்வுகளை அனைவரும் காண நிகழ்த்துத்துகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு அதை பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் திட்டிக்கொண்டே வெளியே வந்தவர்,  வீட்டுக்குச் செல்ல வழித் தெரியாது மாற்றுத் திசையில் சென்று விட்டாராம்!

எங்கள் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த போது அவர்களுக்கு ஒரு முக்கியமான பிரச்சினை இருந்தது. அவர்கள் சரீரம் முழுவதும் வெண் குஷ்டம் பரவி இருந்தது. இக்காரணத்தால் இளம் மனைவியாக கணவனால் புறக்கணிக்கப்பட்டார்கள். எப்படியாவது சுகம் பெற வேண்டும் என்று கோவில், மசூதி என்று அலைந்த அவர்கள் எங்கள் வீட்டில் வேறு ஒரு தெய்வத்தை வழிபாடு செய்வதை அறிந்து கொண்டார்கள். எங்கள் வாழ்க்கை முறையைக் கண்டு அவர்களாகவே ஒரு சிறிய ஜெபத்தை செய்யத் தொடங்கினார்கள்: இயேசுவே நீர் உண்மையானத் தெய்வமானால் என்னை சுகமாக்கும்.

என் தாயார் பின்னாட்களில் கூறியது எனனை மெய் சிலிர்க்க வைத்தது. ஒவ்வொரு நாளும் அந்த வெண்மையான பகுதிகள் குறைந்து கொண்டே வந்ததாம்! ஓர் நாள் முழுச் சரீரமும் முன் போல அழகாக மாறி விட்டது. ஞான ஸ்நானம் பெற்று நாங்கள் செல்லும் திருச்சபையின் அங்கத்தினரானார்கள். ஆவிக்குரிய வாழ்வில் படி படியாக முன்னேறினார்கள். பரலோகம் செல்லும் வழியை அறிந்து கொண்டார்கள்.

‌ஆனால் என்னைத் தொட்ட ஒரு முக்கிய சம்பவத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் அப்போது சற்று வளர்ந்த பிள்ளை. என் பெற்றோர் என்னையும் என் அண்ணனையும் இந்த அம்மாவின் பொறுப்பில் விட்டு விட்டு வெளி ஊருக்குச் சென்றிருந்தனர். அந்த இரவில்  அம்மாவின் தனிப்பட்ட ஜெப வாழ்வைக் காணும் பேற்றைப் பெற்றேன். நள்ளிரவில் அவர்கள் க்ரீன் லேண்ட், ஐஸ்  லேண்ட் போன்ற நாடுகளுக்கு அழுகை யோடு ஜெபிப்பதை என் காதுகளால்  கேட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை. காலையில் முதலில் அவர்களைப் பார்த்து , "நான் பள்ளியில் புவியியல் பாடத்தில் கற்றுக் கொண்ட இந்த நாடுகளின் பெயர்கள் உங்களுக்கு எப்படித் தெரியும்?' என்று வினவினேன். அவர்களால் அப்பெயர்களைத் திரும்பச் சொல்ல முடியவில்லை. நல்ல கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டதால் பரிசுத்த ஆவியானவர் தான் இந்த எளிய படிப்பறிவில்லாத தாயாருக்கு நாடு களுக்காக ஜெபிக்கும் பாரத்தை கொடுத்திருக்கிறார் என்று அறிந்து கொண்டேன்.

‌திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு சுவிசேஷம் எவ்வாறு கடினமான குளிர் பிரதேசங்களான ஆர்டிக் பகுதிகளில் பரவியது என்பதை "Transformation" என்ற வீடியோ பதிவில் கண்ட போது மெய் சிலிர்த்தது. அந்த எளிய தாயின் ஜெப வாழ்க்கைக்காக ஆண்டவருக்கு நன்றி கூறினேன்.

‌இறைபணி, ஜெப வாழ்க்கை குறித்து வேதாகமக் கல்லூரிகளில் மட்டும் அல்லாது உலகம் எங்கும் கர்த்தர் என்னைக் கொண்டு செல்லும் இடங்களில் இந்த அம்மாவைப் பற்றி நான் சொல்லி வருகின்றேன். அவர்களது பெயர் ருக்மணி என்பதாகும். எங்களுக்கு அவர், அம்மா!  "ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்." (
‌1 கொரிந்தியர் 1:27) என்பது எவ்வளவு உண்மை!

No comments:

Post a Comment