Sunday, May 28, 2023

பெந்தெகொஸ்தே என்னும் ஆசீர்வாதம்

 


அப்போஸ்தலர் 2 இல் காணப்படும் பெந்தெகொஸ்தே நிகழ்வின் ஆசீர்வாதங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

ஒற்றுமை என்னும் ஆசீர்வாதம்

சங்கீதக்காரன் இவ்விதம் கூறுகின்றார்: இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?... அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார். (சங்கீதம் 133) இங்கே பெந்தெகொஸ்தே நிகழ்வில்   120 விசுவாசிகள், ஒரே இடத்தில் கூடினர். (அப்போஸ்தலர் 1:15, 2:1) இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஒற்றுமையாக ஜெபித்துக்கொண்டிருந்த இந்த விசுவாசிகளின் குழுவினர் மேல் தான் ஜீவனுள்ள தேவனுடைய ஆவியானவர் இறங்க சித்தம் கொண்டார்  (அப்போஸ்தலர் 1:5, 14).  இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” என்று இயேசு முன்பே சொல்லி இருக்கிறாரே. (மத்தேயு 18:20)

 அனைவரையும் உள்ளடக்கிய ஆசீர்வாதம்

பழைய ஏற்பாட்டு காலத்தில் கடவுளின் ஆவியானவர் தனி நபர்கள் மீது இறங்குவார். இங்கே முதன்முறையாக பரிசுத்த ஆவியானவர் யோவேலின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும் வகையில் விசுவாசிகளான ஒரு கூட்டத்தினர் மீது இறங்கினார்: …அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். (யோவேல் 2:28,29) விசுவாசிகளின் இந்தக் கூட்டம் ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கியதாய் இருந்தது. (அப்போஸ்தலர் 1:14) இது பெண்ணாகிய எனக்கு ஊக்கத்தை அளிக்கின்றது.

 அப்போஸ்தலனாகிய பேதுரு ஆண்கள் பெண்கள் மாத்திரம் அல்ல இறைவனின் முழு திருக்குடும்பத்தையும் இந்த ஆசீர்வாதத்தில் உள்ளடக்கியுள்ளார். நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். (1 பேதுரு 2:9)

 உலகளாவிய நற்செய்தி என்னும் ஆசீர்வாதம்

அன்றைக்கு அந்த 120 பேரால் பேசப்பட்ட பல மொழிகளாகிய அற்புத வரம் அங்கு ஆண்டவரால் ஆயத்தம் செய்யப்பட்டிருந்த பார்வையாளர்களுக்கு நற்செய்தியை பெற வழிவகுத்தது ஒரு அதிசயம் அன்றோ? கடவுளுக்குப் பயந்த யூதர்கள் வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு தேசத்திலிருந்தும் பெந்தெகொஸ்தே நிகழ்விற்காக அங்கே கூடியிருந்தனர். (அப் 2:.5) உலகமே அந்த 120 சீடர்களின் அருகாமையில் இருந்தது. மக்களுக்கு நற்செய்தியை பகிர்ந்து கொள்ள பல மைல்கள் பயணம் செய்யாமல் அங்கேயே நற்செய்தியை அறிவித்தது இன்றைய சூழலில் ஊடகங்களின் நல்ல பயன்பாட்டையே எனக்கு நினைவூட்டுகின்றது.

மொழிகள் என்னும் ஆசீர்வாதம்

இந்த யூதர்கள் பல தேசங்களிலிருந்து வந்தது மாத்திரமல்ல, இவர்கள் வெவ்வேறு மொழியியல் சூழல்களில் இருந்தும் வந்திருந்தனர்.

பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,  பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். (வ. 9-11) அப்போஸ்தலர் புத்தகத்தில் அந்நிய பாஷையின் வரம் இப்படியாக புரிந்துகொள்ளப்பட்ட ஒரே இடம் இதுதான்! இன்று நம் சூழலில் இப்படி ஒரு மொழி-அதிசயத்தை எப்படி மீண்டும் பெற முடியும்?

 கேமரூன் டவுன்சென்ட் ஒரு மிஷனரியாக கெளத்தமாலாவில் (Guatemala) பணிபுரிந்தபோது, ​​இந்த கேள்வியை அங்குள்ள ஒரு ஆதிவாசி தலைவர் கேட்டார்:  "உங்கள் கடவுள் மிகவும் பெரியவர் என்றால், அவர் ஏன் என் மொழியைப் பேசவில்லை?" இது டவுன்சென்டின் வாழ்க்கையை மாற்றியது.  டவுன்சென்ட் பைபிள்களை விற்கும் முயற்சியை கைவிட்டு, அந்த பழங்குடியினர் மத்தியில் வாழத் தொடங்கினார். அவர் அவர்களின் சிக்கலான மொழியைக் கற்றுக்கொண்டார், அதற்கு  எழுத்துக்களை உருவாக்கினார், இலக்கணத்தை பகுப்பாய்வு செய்தார், மேலும் புதிய ஏற்பாட்டை பத்து வருடங்கள் என்னும் குறிப்பிடத்தக்க குறுகிய காலத்தில் மொழிபெயர்த்தார்.

நாமும் இன்று மக்களின் தாய்மொழிகளில் வேதாகமத்தைக் கொடுப்பதன் மூலம் கடவுளின் செயலை மக்கள் அவரவர் மொழிகளில் அறிவிக்க உதவும் கருவிகளாக இருக்க முடியும்.

 திரள் கூட்டம் என்னும் ஆசீர்வாதம்

பெந்தெகொஸ்தே நிகழ்வின் போது பேதுருவின் பிரசங்கத்தின் விளைவு என்ன? அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். (வ.41) அதன்பின் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் விசுவாசிகளின் எண்ணிக்கையில் வளர்ச்சி, மற்றும் சபைகளின் பெருக்கம் பற்றி விவரிக்கின்றது.  விசுவாசிகளின் எண்ணிக்கைப் பெருக்கம் என்பது நம்  இறுதியான, உறுதியான ஆசீர்வாதமும் கூட!

 அப்போஸ்தலனாகிய யோவான் அந்த ஆசீர்வாதத்தைப் பற்றி இப்படியாக பதிவு செய்கிறார்: இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். (வெளிப்படுத்துதல் 7:9) பரிசுத்த ஆவியானவரின் அருளால் நாம் இந்த ஆசீர்வாதம் நிகழ காரணராக வேண்டும்.

மேற்கண்ட ஆசீர்வாதங்களைப் பெறவும், நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு நாம் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். இறை ஆசிக்காக வேண்டுகிறேன்

 

No comments:

Post a Comment