Friday, March 7, 2014

மகளிரின் மாட்சி

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 "உலக மகளிர் தினமாக" கொண்டாடப்படுகிறது. ஆண் பெண் சமத்துவத்தை நினைவுப்படுத்தும் தினமாக இதுக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் நாட்டின் கண்கள் என்றும் குடும்பத்தின் குத்து விளக்குகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் அநேக பெண்கள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் பலாத்காரமாகவும், மெளனமாகவும்  அவதிக்குள்ளாகின்றனர். மகளிரின் மாட்சிக் குறித்து அறிவில்லாமையே இதற்கு காரணமாகவும் அமைந்து விடுகிறது. வேதம் இதைக் குறித்து சொல்வது என்ன?

குடும்பத்தில் சமம்
 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். "...பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்" என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். (ஆதியாகமம் 1:27-28). எனவே ஆதாம் ஏவாள் இருவருமே இறை படைப்பின் மகுடமாவர். கீழ்படிவதற்கான முதல் கட்டளை ஆதாமுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. இதில் கருத்து பரிமாற்றம் எப்பொழுது, எவ்வாறு தவறினது என்று நாம் அறியோம். சாத்தானின் வலையில் இருவருமே வீழ்ந்தனர். இருவரும் பாவம் செய்து, இருவரும் தண்டிக்கப்பட்டனர். "உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான்" என்றும் தேவன் ஏவாளிடம் கூறினார் (3:16). அதை சொல்வதற்கு முன்பே சர்ப்பத்தைப் பார்த்து ஸ்திரீயின் வித்தானக் கிறிஸ்து பிசாசின் தலையை நசுக்குவார் என்ற நம்பிக்கை (வ.15) வித்தையிடுகின்றார்.

சொத்தில் சமம் 
யோபுவின் பின்னாட்களில் அவனுக்குப் பிறந்த மூன்று பெண் பிள்ளைகளுக்கும் அவர்கள் சகோதரரின் நடுவிலே சுதந்தரம் கொடுத்தான் என்று வேதம் கூறுகின்றது (யோபு 42:16). செலொப்பியாத் வனாந்தரத்தில் மரித்ததால் அவன் குமாரத்திகளான செலொப்பியாத்தின் குமாரத்திகளாகிய ம‌க்லாள் திர்சாள் ஒக்லாள் மில்காள் அவர்களுக்கு சகோதரர் இல்லாததினாலே, அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே அவர்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும் என்று கேட்டார்கள். இதைக் குறித்து கர்த்தரிடம் கேட்ட போது அந்த பெண்களின் வேண்டுகோளுக்கு அவர் இணக்கம் தெரிவித்ததோடு,  இஸ்ரவேலருக்கு அதை ஒரு உடன்படிக்கையாகவும் கொடுத்தார் (எண்ணாகமம் 27:1‍-8). நம் நாட்டில் வரதட்சணைக் கொடுமையால் சந்தோஷத்தையும், சமாதானத்தையும், உயிரையுமே இழந்த பெண்கள் அநேகர். கர்த்தர் கொடுத்த உடன்படிக்கைகளை பின்பற்றி, நம் குடும்பங்களில் ஆண் மக்களுக்கும் பெண் மக்களுக்கும் சமமாக சொத்தைக் கொடுத்தால், வரதட்சணைக் கொடுமையிலிருந்து மீள வழி உண்டு.

ஊழியத்தில் சமம்
தங்கள் பாவ வழிகளிலிருந்து மனந்திரும்புகின்ற ஜனங்களைப் பார்த்து கர்த்தர் கொடுக்கின்ற வாக்குத்தத்தம்: "நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்;....ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்."(யோவேல் 2:28-29)பழைய ஏற்பாட்டில் மிரியாம், தெபோராள், உல்தாள் போன்ற பெண் தீர்க்கர்களைக் குறித்து வாசிக்கின்றோம். புதிய ஏற்பாட்டில் பிலிப்புவின் ஐந்து குமாரத்திகளுமே தீர்க்கதரிசனம் உரைத்தாக வாசிக்கின்றோம். பிரச்சனைகள் நிறைந்த கொரிந்து திருச்சபையிலும், பெண் தீர்க்கர் இருந்தார்கள் (1 கொரிந்தியர் 14:34-35). அதே வரிசையில், அறுப்பு அதிகமுள்ள இந்திய சூழலில் ஆண்களும் பெண்களும் இணைந்து இறைபணியில் ஈடுபடும் தேவை உள்ளது.


கடவுளின் மீட்பின் திட்டத்தில் அவர் நமக்கு சொல்வது என்ன? "யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்." (கலாத்தியர் 3:28). மத்தேயு 22:30ன் பிரகாரம் பரலோகத்தில் ஆண்களும் பெண்களும் தூதரைப் போலிருப்பர். எனவே வேதம் துவக்கம் முதல் முடிவு வரை ஆண் பெண் சமத்துவத்தை தீர்க்கமாக உரைக்கின்றது. எனவே நம் குடும்பங்களிலும், சபைகளிலும், சமுதாயத்திலும் பெண்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நம் தலைமுறையில் நம் வசம் உள்ளவரை இருபாலரும் ஒருவரையொருவர் மதிக்க கற்றுத் தர வேண்டும். அப்பொழுது தான் நாம் முன்னேறிய இந்தியராகவும், இறைவன் விரும்பும் சமுதாயமாகவும் மாற இயலும்.

No comments:

Post a Comment