Tuesday, March 25, 2014

"நீ என் சகோதரரிடத்திற்குப் போய்,சொல்லு!" (மகதலேனா மரியாளின் வாழ்விலிருந்து)


மகதலேனா மரியாள், வேதத்திலுள்ள பெயர் சொல்லப்பட்ட ஒரு சில பெண்களுள் ஒருவள் ஆவாள். 14 முறை அவள் பெயர் சுவிசேஷங்களில் சொல்லப்பட்டுள்ளது. சுவிசேஷங்களில் மகதலேனா மரியாளின் பெயர் எப்பொழுதும் முதலில் காணப்படுகின்றது. உயிர்த்தெழுந்த ஆண்டவர் முதலாவதாக மகதலேனா மரியாளுக்குத் தான் காட்சி அளித்தார். அவள் "அப்போஸ்தலருக்கு அப்போஸ்தலர்" என்று அழைக்கபடுகின்றாள். சுவிசேஷங்கள் அவள் ஒரு தலைவியாக செயல்பட்டிருக்க வேண்டும் என்பதை எடுத்து இயம்புகின்றது.

அவளின் கதை
"மகதலா" என்னும் சிற்றூரிலிருந்து அவள் வருவதால் அவள் மகதலேனா மரியாள் என்று அழைக்கப்பட்டாள். அவளுடைய இளம் வயதில் அவள் ஏழு பிசாசுகளினால் அலைகழிக்கப்பட்டாள். லூக்கா 8:1-3 ல் அவளைப் பற்றி நாம் வாசிக்கின்ற வேத பகுதி பாவியான ஸ்தீரியின் கதையைத் தொடர்ந்து வருவதால், பலர் மகதலேனா மரியாளை "திருந்திய வேசியாக" காண்கின்றனர். பிசாசு பிடித்திருப்பதும், ஒரு பெண்ணின் பாவமும், பாலுறவுக்கடுத்த தவறான செயலுக்கு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவமானத்தின் பாத்திரமாயிந்த அவளை இயேசுவின் அன்பு தொட்டதால் அவரின் வல்லமை விளங்கும் விலையுயர்ந்த ஆபரணமானாள். மகதலேனா மரியாள் இயேசுவை பின்பற்றத் தொடங்கினாள். அவளும் ஒரு பெண்கள் குழுவும் தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்து வந்தனர்.

மகதலேனா மரியாள் இயேசுவின் சிலுவை வரை அவரைப் பின் தொடர்ந்தாள். ஆனால் அனைவருமே ஆண்களாயிருந்த அவருடைய 12 சீடரோ அதை செய்யவில்லை. மேலும் முதன்மையிலிருந்த இரண்டு சீடரான பேதுருவும் யோவானும் இயேசுவின் கல்லறையில் அவரைக் காணாது தோல்வியுடன் வீட்டிற்கு சென்றனர் (யோவான் 20:3 9). ஆனால் மகதலேனா மரியாளோ தனிமையில் விடாமுயற்சியோடு அங்கேயே காத்திருந்தாள். எனவே அவளோடு பேச கடவுள் தூதர்களை அனுப்பினார். ஆனால் அதை விட அதிர்ச்சியும் ஆனந்தமும் அவளுக்குக் காத்திருந்தது. உயிர்த்த இயேசு அவளுக்குத் தோன்றினார்! இன்னும் ஒரு முறை அவளை இழக்க விரும்பாத அவள் அவரைப் பற்றிக் கொள்ள விரும்பினாள். ஆனால் அவரோ, "என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு." என்றார் (யோவான் 20:17) அவருடைய சீடர்களோ மகதலேனா மரியாளின் கூற்றை நம்பவில்லை (மாற்கு 16 11). இயேசு அவருடைய ஆண் சீடருக்கும் அதன் பின்னர் தரிசனம் ஆனார். ஆனால் அவரை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதயகடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொள்ள வேண்டியிருந்தது (வ. 14).

இயேசு உயிரோடு எழுந்தபின் உள்ள நிகழ்வுகளை நான்கு சுவிசேஷங்களை எழுதினவர்களும் சற்று வித்தியாசமாக விவரித்திருந்தாலும், அவர்கள் அனைவருமே மகதலேனா மரியாள் உயிர்த்த இயேசுவை சந்தித்ததிலும் மற்றவர்களுக்கு அவள் அதை சொன்னதிலும் அவளுக்கிருந்த மையப்பங்கை ஒத்துக் கொள்கின்றனர். அப்போஸ்தலர் முதல் இரண்டு அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெந்தகோஸ்தின் நாளில் இருந்த 120 சீடர்களுள் பெண்களும் இருந்ததால், அக்கூட்டத்தில் மகதலேனா மரியாளும் இருந்திருப்பாள் என்று நம்பப்படுகின்றது.

மகதலேனா மரியாள் ஒரு சுவிசேஷகியாக பணிபுரிந்து பிரான்ஸ் தேசம் வரை நற்செய்தி எடுத்துச் சென்றாள் என்று பாரம்பரியம் கூறுகின்றது. இன்று நாம் தெரிந்து கொள்ளும் சத்தியமும் நற்செய்தியும் என்னவென்றால்: மகதலேனா மரியாள் வாழ்வில் செய்தது போல நம்மொருவர் வாழ்விலும் சகோதரருக்கு இணையாக சகோதரிகள் ஊழியம் செய்ய‌ அதிகாரம் கொடுப்பவர் இயேசுவே! இந்தியாவிலுள்ள நகர்களிலும், கிராமங்களிலும் உயிர்த்த இயேசுவைக் குறித்து சொல்லும் ஆவிக்குரிய கட்டளையை நாம் எல்லோருமே பெற்றிருக்கிறோம். மற்றொருவர் நமக்கு இந்த அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்று நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆண்டவர் நம்மைப் பார்த்து சொல்வதெல்லாம், "நீ என் சகோதரரிடத்திற்குப் போய்,சொல்லு!" என்பதே! செய்வோமா?

No comments:

Post a Comment