'நான் உன்னைத் திருமணம் செய்திருக்கக் கூடாது!' என்று கணவர், மனைவியர் ஒருவரையொருவர் பார்த்துக் கூறுவதுண்டு. சிலர் இன்னும் கடினமாக, 'உன்னைத் திருமணம் செய்ததற்குப் பதிலாக நான் இன்னாரைத் திருமணம் செய்திருக்கலாம்' என்று கூறுவதுண்டு. 'இது என் வாழ்வில் நடந்திருக்கவேக் கூடாது' என்னும் கூற்றை நம்மில் அநேகர் கூறியிருக்கக்கூடும். இப்படிப்பட்ட வார்த்தைகள் திருமண வாழ்வை நரகமாக்குகின்றது. அன்பற்ற உறவுகளிலே நாம் என்ன செய்யக்கூடும்?
தான் விரும்பாத,
அழகற்ற லேயாளை யாக்கோபு திருமணம்
செய்யும் சூழல் ஏற்பட்டது. பாவம் லேயாள்! விரும்பப்படாத மனைவியாகவே அவள்
வாழ்ந்தாள். பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், "புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தம், பூமி
சஞ்சலப்படுகிறது" என்று நீதிமொழிகள் 30:23 சொல்லுகின்றது.
யாக்கோபுக்கும் லேயாளுக்கும் இருந்த பந்தம், தான் முதன் முதலில் விரும்பிய அழகான ராகேலை
திருமணம் முடித்தபிறகு இன்னும் மோசமடைந்தது. பதினான்கு வருடங்கள் ராகேலுக்காக அவன்
உழைத்ததிலிருந்து இதை உணர்ந்து கொள்ளலாம். எவ்வாறாகத் தான் லேயாள் இந்த அன்பற்ற
உறவை சமாளித்தாள்? அன்பற்ற உறவாயிருந்தாலும் பிள்ளைகளை அதிகமாக
பெற்றுத் தள்ளிய லேயாளால் கணவனின் அன்பை பெற முடிந்ததா? ஒவ்வொரு குழந்தைக்கும் அவள் வைத்த பெயர்கள் மூலம் நாம் லேயாளிடமிருந்து சில
காரியங்களைக் கற்றுக்கொள்ளுகிறோம்.
முதல் மூன்று
குழந்தைகளுக்கு பெயரிடும் போது அவளுடைய கணவன் அவளிடம் அன்பு கூற வேண்டும், சேர்ந்து வாழ வேண்டும் என்றெல்லாம் பொருள்படும்படி பெயரிட்டாள் (ஆதியாகமம் 29:32-34). ஒரு திருப்பு
முனையை அவளுடைய நான்காம் பிரசவத்தின் நேரத்தில் காண்கின்றோம். அப்பொழுதிலிருந்து ஆக்கப்பூர்வமான
வார்த்தைகளைப் பேசத் துவங்கினாள். நான்காம் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது, "இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்" என்று
சொல்லி யூதா என்று பெயரிட்டாள் (ஆதியாகமம் 29:35). கணவனுடைய அன்பை
பெறுவதில் தோல்வியடைந்த சமயத்தில் அவள் ஆண்டவரைத் துதித்தது தான் அந்த சிறப்பான
மனமாற்றம் ஆகும்.
இன்னும் ஒரு
குழந்தையும் பெறாத ராகேலின் மன உளைச்சலையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆனால் அவளிடமிருந்து ஒரு அழிவுப்பூர்வமான வார்த்தை வருகின்றது: "எனக்குப்
பிள்ளை கொடும், இல்லாவிட்டால்
நான் சாகிறேன்" (30:1). அந்த நாட்களின்
கலாச்சாரத்தைப் பின்பற்றின ராகேல் தன் வேலைக்காரியை யாக்கோபுக்குக் கொடுத்து அதன்
மூலம் பெற்ற குழந்தைக்கு, "நான் மகா
போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன்" என்ற பொருளில் பெயரிடுகின்றாள்
(30:8). லேயாளும் அதே
முறையைப் பின்பற்றி, "நான் பாக்கியவதி,
ஸ்திரீகள் என்னைப்
பாக்கியவதி என்பார்கள்" என்று பொருள்படும் பெயரை இடுகின்றாள் (30:13). " மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்" என்று நீதிமொழிகள் 18:21 கூறுகின்றது. நம்முடைய அன்பற்ற நிலைமைகளில் ஆண்டவரை நம்பி ஆக்கப்பூர்வம்மான வார்த்தைகளைப் பேசக் கற்றுக்கொள்ளவேண்டும்.
எனவே லேயாள், அடுத்த குழந்தைப் பிறந்த போது, "இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார்" (கனம்
பண்ணுவார் என்று ஒரு மொழிபெயர்ப்பு கூறுகின்றது) என்று கூறுகின்றாள் (30:20).
கணவனிடமிருந்து அவளுடைய
எதிர்பார்ப்பு மாறி விட்டது. அன்பு திருமண வாழ்விற்கு முக்கியம் என்றாலும்
நடைமுறையில் தேவைப்படுவது கனமும் மரியாதையும் அன்றோ?
ராகேலுக்கு அவள்
எதற்கு அதிகம் ஆசைப்பட்டாளோ அதுவே அவள் உயிர் கொல்லியாக மாறிவிட்டது.
"துக்கத்துடனே மகனைப் பெற்றென்" என்று பொருளுள்ள
பென்யமீனைப் பெற்று விட்டு அப்பிரசவத்தில் மரித்து விடுகின்றாள் (35:18). அவளுக்கு அழகிருந்தது, கணவனின் அதிகமான அன்பு இருந்தது. ஆனால் குழந்தை
பெறுவதில் பிரச்சனை இருந்தது.
விவிலியத்தின்
நாட்களில் இறந்த பிறகு ஒருவரை அடக்கம் பண்ணும் இடம் அவருக்கு கனத்தை கொடுக்கக்கூடியதாக இருந்தது. ராகேலை பிரயாணத்தில் வழியிலேயே அடக்கம் பண்ணும் சூழல்
ஏற்பட்டது. ஆனால் லேயாள் அவள் கணவனான யாக்கோபோடே குடும்பக் கல்லறையில் அடக்கம்
பண்ணப்பட்டாள். மட்டுமல்ல, நித்தியத்திலே
லேயாளுக்கு தன் மகனான லேவியின் மூலமாக
அவள் இஸ்ரவேலின் பெருமை வாய்ந்த ஆசாரிய வம்சத்தாரின் தாயானதும், தன் மகனான யூதாவின் மூலமாக தாவீது வழி வந்த
ராஜாக்களுக்கும் அவ்வழியே வந்த இயேசு ரட்சகரின் தாயானதும் தெரிய வந்திருக்கும்.
அன்பற்ற திருமண உறவில் எது நடக்கும், எது நடக்காது என்பதைக் கற்றறிந்த லேயாளுக்கு நித்தியத்தில் மிகுதியான பலன்
கிடைத்தது.
தங்களுக்கு
உள்ளதில் நிறைவாய் இருந்திருப்பது இருவருக்கும் சரியாய் இருந்திருக்கும். லேயாளுக்கு அழகும், அன்பும் கிடைக்கும் பாக்கியமில்லை. ஆனால் அவளுக்கு
குழந்தைகள் பிறந்தன. கர்த்தர் மேல் அவள் பார்வை திரும்பியதிலிருந்து உண்மையான்
அன்பு எது, உலக அன்பு எது
என்பதை புரிந்துகொண்டு வாழ்வில் நிறைவாய் இருக்கக் கற்றுக் கொண்டாள். ராகேலுக்கு
அழகு இருந்தது, கணவனின் அன்பு
இருந்தது. ஆனால் வார்தையிலும், வாழ்விலும்
நிறைவில்லை. பவுல் சொன்னது போல, "நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்"
என்று அன்பற்ற உலக உறவுகளில் ஆண்டவரின் அன்பில் திழைத்து நிறைவாய் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
மனிதர்களாகிய
நமக்கு அன்பற்ற உறவுகளின் நிமித்தம் உணர்வுகளில் அதிகமான பாதிப்புகள் இருக்கக்
கூடும். யார் நமக்கு நம் உணர்வுகளிலிலும், சிந்தைகளிலும் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும்? பவுல் இந்த இரகசியத்தை நமக்குக் கற்றுக்
கொடுக்கின்றார். "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." (பிலிப்பியர் 4: 12-13) எனவே லேயாளைப் போல கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். அன்பற்ற உறவுகளிலே அவரே
நம்மை வாழ்வில் நிறைவோடும், மகிழ்ச்சியோடும்
வாழச்செய்வார்.
Good practical and thought provoking!
ReplyDeleteThanks for the feedback!
Delete