Wednesday, May 3, 2017

மிஷனரிக் கண்ணாடித் தொடர்:‍‍ ந‌ம் மிஷனரிப் பெற்றோர்

அருட்பணியின் முன்னோடிகள்
ஆபிரகாமும் சாராளும பூர்வீகமாக மெசொப்பொத்தாமியாவின் (இந்நாள் ஈராக்) தலைநகரான 'ஊர்" என்னும் பட்டணவாசிகளாவர். அந்தப் பட்டணம் அந்த நாளிலேயே நாகரீகத்திற்குப் பெயர் பெற்றதாகும். ஆபிரகாமும் அவனுடைய குடும்பத்தினரும் வேறே தேவர்களைச் சேவித்து வந்தனர் (யோசுவா 24:2). அந்த சமயத்தில் தான் அவன் அறியாத கடவுள் ஒருவரிடமிருந்து அவன் அறியாத தேசத்திற்குச் செல்லும்படி அழைப்பு வந்தது (ஆதியாகமம் 12:1). இதன் பின்னர் தான், அந்த‌ அறியாத தேவன், யெகோவா என்று அவன் அறிந்து அவரைத் தொழுது கொண்டான் (ஆதியாகமம் 12). நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும், ஆபிரகாமும் சாராளும் அவர்களது சொகுசு எல்லைகளை விட்டு விட்டு பின்னடைந்த நாட்டை நோக்கிச் சென்றனர். தேவன் ஆபிரகாமை "தேசங்களுக்குத் (ஜாதிகளுக்கு) தகப்பன்" (ஆதியாகமம் 17:5) என்றும், சாராளை, "தேசங்களுக்குத் தாய்" (ஆதியாகமம்17:16) என்று பெயரிட்டுக் கனப்படுத்தினார். சொகுசு எல்லைகளை விட்டு வெளியேறி அருட்பணி செய்ய வேண்டும் என்ற இறை அழைப்பை அசட்டை செய்யும் நமக்கு இந்த நாடோடித் தம்பதியர் சவால் விடுக்கின்றனர். அன்றும், இன்றும் இறை மகிமையை பறைசாற்ற தேவன் பயன்படுத்தும் முறை குடும்பங்களும், தனி மனிதருந்தான். (அப்போஸ்தலனாகிய பவுல் போல!)

நூறு மடங்கு ஆசீர்வாதம்
அருட்பணி வரலாற்றில் அதிகம் காணாத 100 சதவிகித கீழ்படிதலை ஆபிரகாம், சாராளிடம் நாம் காண்கிறோம். பல வருடங்களுக்குப் பிறகு இயேசு தனது சீடர்களிடம் கூறியதாவது: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,  இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மாற்கு 10:29‍-30). உண்மையாகவே ஆபிரகாமும், சாராளும் சரீர, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நூறு மடங்குப் பெற்றனர் (ஆதியாகமம் 12:1 - 3).

மெய்த் தேவனை அறிவதாலுண்டாகும் ஆசீர்வாதமும், சரீர ஆசீர்வாதங்களும் பிறரை ஆசீர்வதித்துக் கொண்டேயிருப்பதற்காக என்று நாம் ஆபிரகாமுக்கு அருளப்பட்ட ஆசீர்வாதத்திலிருந்துக் காணலாம் (ஆதியாகமம் 12:1-3). நாம் ஆசீர்வதிக்கப்படுவதன் நோக்கமே அகில‌ உலகினரும் ஆசீர்வாதமாக‌ இருக்க வேண்டும் என்பதற்காகவே என்று சங்கீதம் 67 முழுமையிலும் காண்கிறோம். பரதேசியாய் பல இடங்களுக்குப் பிரயாணித்த ஆபிரகாம் தான் சந்தித்த மக்கள் இனத்தவரிடம் நல்லுறவை கட்டியெழுப்பினார். ஆதியாகமம் 23 ல் ஏத்தியரோடுள்ள நல்லுறவைக் காண்கிறோம். ஆதியாகமம் 14ல் மாத்திரம் ஆறு பிராந்திய ராஜாக்களைக் குறித்த சம்பவம் உள்ளது. ஆபிரகாமுக்கு அருளப்பட்ட ஆசீர்வாத வார்த்தைகளில் முக்கியமான ஒன்று "உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்" என்பதாகும். இது உண்மையாகவே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனும் (ஆதியாகமம் 12:10 20), கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கும் (ஆதியாகமம் 20) சாராளைத் தொட நினைத்த இரண்டுத் தருணங்களிலும் நிறைவேறியது."உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்" என்று சகரியா 2:8 ல் காணப்படும் தேவ வார்த்தையின் வல்லமையை அந்த ராஜாக்களும், அரண்மனை அதிகாரிகளும் அறிந்துகொண்டனர்.

தேவ மகிமையை சுமந்துச் சென்ற இந்தத் தம்பதியரின் தாக்கத்தால் இப்படிப்பட்ட ஆளுமையாளர்கள் தங்கள் தெய்வங்களை விட பெரிய தெய்வத்தை அறிந்துகொள்ள முடிந்தது. சாலேமின் ராஜாவும் ஆசாரியனுமான மெல்கிசேதேக்குக்கு ஆபிரகாம் தசம பாகம் அளித்ததாக வேதம் கூறுகின்றது (ஆதியாகமம் 14:20). இருவரும் ஒருவரையொருவர் ஆசீர்வதித்துக்கொண்டனர் என்பதே உண்மை! ஓரினச்சேர்க்கை என்னும் பாவத்தில் வாழ்ந்த சோதாம் பட்டணத்தாருக்காக மன்றாடி ஜெபித்த ஆபிரகாம் வருங்கால சந்ததியர் திறப்பின் வாசலில் நின்று அழியும் மானிடருக்காக ஜெபிக்கும் முன்மாதிரியை வைக்கின்றார். இத்தம்பதியர் தங்கள் ஆவிக்குரிய ஈவாகிய யேகோவாவைப் பிறருக்கு அளித்து, தங்கள் சரீர ஆசீர்வாதங்க‌ளையும் அனைவருக்கும் பகிர்ந்தனர். இவர்களின் விருந்தோம்பலைக் குறித்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு எபிரேய ஆக்கியோன் உயர்வாகக் கூறுகின்றார் (எபிரேயர் 13:2).

உடன்படிக்கைக்கு உண்மை
நம்மெல்லாரைப் போன்றும் ஆபிரகாமும் சாராளும் பூரண உத்தமர் அல்லர். பார்வோன், மற்றும் அபிமெலேக்கு சம்பந்தப்பட்ட இரண்டு சம்பவங்களிலும் ஆபிரகாம் பொய் பேசினார் (ஆதியாகமம் 12 & 20). வாக்குத்தத்தத்தின் பிள்ளைக்காக பல ஆண்டுகள் காத்திருந்த வேளையில் எகிப்திய அடிமைப் பெண்ணான ஆகாரைத் தங்கள் அந்தரங்க வாழ்வில் புகுத்திய நாளிலிருந்து (ஆதியாகமம் 16) சகலமும் தாறுமாறாக மாறியது. ஆபிரகாம், ஆகார் வழி வந்த இஸ்மவேல் வழியாக சரித்திரத்தில் இஸ்லாமும் வந்தது. இதன் துவக்கம் ஆபிரகாமும் சாராளும் தேவ வார்த்தையிலிருந்து விலகியதால் தானே!

எனினும் தனது வாக்குத்தத்திற்கு உண்மையாக ஆண்டவர் ஆபிரகாமின் சந்ததியாரை ஆசீர்வதிக்கின்றார். கிறிஸ்து ஆபிரகாமின் வித்தாகத் தோன்றினார் (மத்தேயு 1). அவர் மூலம் சகல உலகத்தினரும் நித்திய ஜீவனாகிய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்கின்றனர் (யோவான் 3:16). உலக ஆசீர்வாதம் மாத்திரமே நம் வாழ்க்கையாக முடியாது. தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு ஆபிரகாம் காத்திருந்தான் என்று கூறுவதன் மூலம் எபிரேய ஆக்கியோன் மேற்கூறிய உண்மைக்கு வலுக்கொடுக்கின்றார் (எபிரேயர் 11:10). வாக்குத்தத்தின் பிள்ளையை பலிபீடத்தில் வைத்ததால் ஆபிரகாம் மீண்டும் தன்னை நிருபித்து, எந்த சூழலிலும், ஏன் என்று வினவாமல் ஆண்டவருக்குக் கீழ்படிய நமக்கு முன் உதாரணத்தை வைக்கின்றார். இன்றும் ஆண்டவர் தன் உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவர். அருட்பணியில் ஈடுபடுவது நம் தகுதியாலல்ல. இத்தம்பதியரைப் போன்று நம் நீதி அழுக்கான கந்தையே. நம் தவறுகளின் விளைவுகளை நாம் சந்திக்க வேண்டும். ஆனால் கர்த்தரோ நம் தவறுகளையும் அருட்பணியின் நிமித்தம் சேர்த்துக்கோர்த்து அழகான வரைபடமாக்குகிறார். மிஷனரிப் பெற்றோரான ஆபிரகாம், சாராளின் பிள்ளைகளாக, நம் கிறிஸ்தவ விசுவாசத்தை உலகெங்கும் பறைசாற்றுவோம்.

மிஷனிரிக் கண்ணாடித் தொடரின் முந்தையப் பதிவுகளை இந்தத் தொடர்புகளில் வாசிக்கலாம்:

1. http://graceidarajan.blogspot.in/2017/03/blog-post.html
2. http://graceidarajan.blogspot.in/2017/04/blog-post.html

No comments:

Post a Comment