Monday, May 15, 2017

டிவிட்டர் செய்திகள்: ஆதியாகமத்திலிருந்து


ஆதியாகமம் 12:1-3ல் ஆபிரகாமுக்குக் கூறப்பட்டுள்ள வல்லமையான வார்த்தைகள் யெகோவா தேவனால் அழைக்கப்பட்டுள்ள பிள்ளைகளான நம் எல்லாருடைய வாழ்விலும் நிறைவேறிக் கொண்டேயிருக்கும். நம்முடைய ஆதி மாதா, பிதா வாழ்வில் இது உண்மையாக இருந்தது. அவர்தம் வாழ்விலிருந்து மூன்று டிவிட்டர் (குறுஞ்செய்தி) செய்திகளை என்னுடைய மிஷனரிக் கண்ணாடித் தொடருக்காக இந்த முறை தெரிவு செய்துள்ளேன்! (உங்கள் கவனத்திற்கு: இந்த வேதப் பகுதிகளை மிஷனரிக் கண்ணாடி அணிந்து வாசிக்க வேண்டும்)

செய்தி 1: "நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்" (26:28)
ஆபிரகாமின் வாழ்வில் நடந்தது போலவே பெலிஸ்திய ராஜாவாகிய அபிமெலேக்கோடு ஈசாக்குக்கும் நடந்தது (ஆதியாகமம் 20 & 26ல் ராஜா சாராளையும், ரெபெக்காளையும்  தொட நினைத்த காரியத்தில்). இந்த இரு சம்பவங்களிலும் வரும் அபிமெலேக்கு என்னும் ராஜா ஒருவரே என்று அதிகமான சரித்திர ஆசிரியர்கள் நம்புகின்றனர். இரு சம்பவங்களிலும் நம் முற்பிதாக்கள் முழுமையிலும் நல்லவர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், மறைந்த தீங்கிலிருந்து தேவன் அவருடைய பிள்ளைகளைக் காப்பாற்றுகிற‌தைக் காண்கிறோம்.

ஆனால் ஈசாக்கிடம் ராஜா ஒரு நற்செயலை இந்த முறைக் கண்டான். ஒவ்வொரு முறையும் ஈசாக்கும் அவனுடைய மனிதரும் துரவுகளைத் தோண்டிய போதும், அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டிய போதும் அபிமெலேக்கும் அவன் மனிதரும் அவர்களைத் துரத்தினர். ஈசாக்கும் அவன் மனிதருமோ பழிவாங்காமல், ஒவ்வொரு முறையும் விட்டுக்கொடுத்து அடுத்த இடத்திற்குச் சென்றனர். இந்த சூழலில் ஈசாக்கின் காரியங்களில் விருத்தியைக் கண்ட அபிமெலேக்கும் அவனோடிருந்த மற்றத் தலைவர்களும், "நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்" என்று வியந்தனர்சரித்திரத்தில் சக்தி வாய்ந்த டிவிட்டர் செய்தியாக இதை நான் கருதுகின்றேன். அதன் பின்னர் அகிமெலேக்கும், மற்றத் தலைவரும் ஈசாக்கோடு சமாதான உடன்படிக்கை செய்தனர். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன? அருட்பணி என்பது அடிப்படையில் நம் வாழ்வேயாகும். கர்த்தர் ஆபிரகாமின் சம்பவத்தில் ராஜாவாகிய அபிமெலேக்கோடு பேசினார் என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும் (20:3). அவர் நாம மகிமைக்காக கர்த்தர் இன்றும் மற்ற மதத்தினரோடும் பேசுவார் என்பது உண்மை.

செய்தி 2: “உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள்” (27:29)
ஆபிரகாமுக்கு இறைவன் அளித்த ஆசீர்வாதத்தை ஈசாக்கு தன் மகன் யாக்கோபுக்கு கையளிக்கின்றான். இங்கு ஆழ்ந்த இறையியலுக்குள் செல்லாமல் நான் சொல்ல விழைவது என்னவென்றால், தேவன் ஏசாவைக் காட்டிலும் ஈசாக்கை ஆசீர்வதிப்பதில் பாரபட்சம் ஏதுமில்லை என்பதாகும். அப்போதையத் தேவையான கூழுக்காக தன் சேஷ்ட புத்திர பாகத்தை அலட்சியமாய் விற்றுப் போட்ட ஏசாவும், ஆசீர்வாதத்திற்காக உணவைப்  பயன்படுத்தியே தாயோடு சேர்ந்து தந்திரமாகத் திட்டம் தீட்டி தன் தகப்பனை ஏமாற்றிய யாக்கோபும்ஆகிய இருவரும் செய்தது தவறேயாகும். உண்மை என்னவெனில் கர்த்தர் அனைவரையும் ஆசீர்வதிக்கிறார்(சங்கீதம் 115:13). ஆபிரகாமுக்கு அவர் அருளிய வாக்குக்கு உண்மையாய் இருக்க‌ (ஆதியாகமம் 12:1 3) ஒருவரின் நற்செயலின் அடிப்படையில் அல்ல, கர்த்தரைப் பற்றிய அறிவு பரவ வேண்டும் என்னும் பரந்த நோக்கிற்காக ஒருவரைத் தெரிவு செய்கின்றார். ஈசாக்கு மகனை ஆசீர்வதித்ததில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொரு காரியம்: பெற்றோரும், மூத்தவர்களும் பிள்ளைகளைத் தேசங்களுக்கும், மக்கள் கூட்டங்களுக்கும் ஆசீர்வாதமாக இருக்க வாழ்த்த வேண்டும் என்பதாகும்.

செய்தி 3: “என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்”  (34:30)
யெகோவாவை வழிபட்டு வந்த நம் முன்னோர்கள் வாழ்வில் நாம் காண்பது என்னவெனில் மீண்டும் மீண்டுமாக அவர்கள் தவறினார்கள். ஆனால் ஆண்டவர் ஆபிரகாமுக்குத் தான் அருளிய வாக்குக்கு உண்மையாயிருந்ததால் தான் இவர்களால் வாழ்வில் முன்னேற முடிந்தது. யாக்கோபின் மகளான தீனாள், மாற்று வழிபாட்டுக்காரனான சீகேமுடைய வஞ்சகத்தில் சிக்குண்டு, கற்பழிக்கப்பட்டாள். இதனை அறிந்து வெகுண்டெழுந்த சிமியோனும், லேவியும், சீகேமின் குடும்பத்திலுள்ள ஆண்கள் அனைவரையும் கொன்று குவித்தனர். அந்த இரத்த வாசனையை முகர்ந்த யாக்கோபு வருத்தத்தில் பிதற்றிய வார்த்தை தான் இது:"இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்"(34:30). மற்ற மக்களுக்கு துர் வாசனையாயிருப்பது இறைத் திட்டம் அல்லவே அல்ல. அன்று முதல் இன்று வரை வாழும் தம் பிள்ளைகள் யாவரும் நற்கந்தங்களாயிருக்கவே அவர் விரும்புகின்றார். ஆனால் ஒன்றை நான் கூற முடியும்: அந்த நாட்களின் சூழலில் சீகேமின் கூட்டத்தார், தீனாளின் தெய்வம் வல்லமையுள்ளவர் என்றும் அவர் பிள்ளைகள் வாழ்வில் விளையாடக்கூடாது என்றும் உணர்ந்திருப்பர். (தீனாள் பற்றி என் பழையக் கட்டுரையை இங்குக் காணலாம்: http://graceidarajan.blogspot.in/2015/03/blog-post_21.html)

நம் முன்னோரை பல நாட்டினர், மக்கள் கூட்டத்தினரோடு இடைபட தேவன் காரணமாயிருந்தார். அவர்களது சாதாரண அன்றாட வாழ்வையே அவர் தன் மகிமையின் வாகனமாக பயன்படுத்தினார். இன்றும் தம்மை உண்மையாய் பின்பற்றுவோரை, சுற்றியுள்ளோருக்கு சாட்சிகளாகவே அவர் வைத்துள்ளார். மக்களில் அனேகருக்கு நான்கு சுவிசேஷங்களை வாசிக்க இயலாமல் போகலாம். நாம் தான் ஐந்தாவது சுவிசேஷம். நம்மைக் குறித்து அவர்கள் டிவிட்டர் செய்தியாக என்ன எழுதக்கூடும்?

No comments:

Post a Comment