Sunday, June 2, 2013

புறாவா? கழுகா? ‍- அதிர்ச்சிகளை மேற்கொள்வதில் நீங்கள் எந்த ரகம்?

எதிர்பாராத வியாதி, வேலை செய்யும் இடத்தில் மாற்றங்கள், மிகவும் நேசித்த ஒருவர் மரித்தது என்பவை வாழ்க்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்வுகள். இவ்வதிர்ச்சிகளை ஒவ்வொருவரும் கையாளும் விதங்கள் வித்தியாசமானவை. "நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்" (யோபு 12:7) என்னும் யோபுவின் சொல்லுக்கிணங்க வாழ்வின் கடினமான பாதைகளில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி, இரு பறவைகள் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்களை இங்கு காண்போம்.

புறா ரகம் (சங்கீதம் 55)
இந்த‌ சங்கீதம் தாவீது ராஜாவின் ஒரு புலம்பல் பாடலாகும். அவனது மகனான அப்சலோம் சில வாழ்வின் திருப்பு முனைகளால் தந்தையின் பயங்கரமான விரோதியானான். அரண்மனையை விட்டு தாவீது வெறுங்காலோடு ஓடும்  அவசரமான சூழ்நிலை ஏற்பட்டது.அந்நாட்களில் அவனது நெருங்கிய நண்பன் ஒருவன் தாவீதை பரிகசித்து ஏளனம் செய்ததை இந்த சஙகீதத்தில் காணலாம். "என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன். எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன். நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம்." இது அகித்தோப்பேலாக இருக்கக் கூடும் என்று வேத வல்லுனர்கள் கூறுகின்றனர். "என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்" (சங்கீதம் 41:9) என்று அகித்தோப்பேலைக் குறித்து மற்றுமொரு இடத்தில் தாவீது கூறுகின்றான். தாவீதின் மனநிலமை மேலும் பல சத்துருக்களால் பாதிக்கப்பட்டதைக் குறித்தும் 55 வது சங்கீதத்தில் 
காணலாம்.

தான் நம்பின தன் நண்பன் அகித்தோப்பேலே தன்னைக் கொல்லும் சதியை உளவர்கள் மூலம் கேட்ட போது (2 சாமுவேல் 17), தாவீது கண் கலங்கியிருப்பான். தன் உயிருக்காக ஓடும் போது தாவீதின் உணர்ச்சியின் உச்சக்கட்டம் இப்படியாக வெளி வந்தது என்று நான் நினைக்கிறேன்: "ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன். நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். பெருங்காற்றுக்கும் புசலுக்கும் தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன்.(வசனங்கள் 6 - 8) பிரச்சனைகள் இல்லாத இடம் இவ்வுலகில் ஒன்றில்லை என்பதை ஒரு கணம் மறந்து போகின்றான். இப்படி புறாவைப் போல சிறகடித்து தப்பி ஒளிக்க விரும்பும் அவன் சத்துருக்களை பழி வாங்கும் சொற்களால் வசை பாடுவதையும் காண்கின்றோம்.

ஆனாலும் தாவீது தன்னுடைய‌ எல்லா மன அங்கலாய்ப்பின் நடுவிலும், ஆணடவரை தேடுகிறதை பார்க்கிறோம். அதன் காரணமாக முடிவில் நல்ல வார்த்தைகளைப் பேசுகின்றான்: "கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்." (வசனம் 22). நாமும் நமது மனக் குமுறலின் நடுவில் புறாவைப் போல (சிலர் தற்கொலைக்கு முயற்சிப்பது இந்த இரகமே) ஓடித் தப்பிக்க முயலாமல், ஆண்டவரை நோக்கிப் பார்த்து அவர் மேல் பாரங்களை வைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." என்று தானே இயேசுக் கிறிஸ்துவும் கூறுகின்றார்! கர்த்தர் தாவீதிற்கு இரங்கி அவன் மீண்டும் ராஜாவாக செய்தார். அவனது மாய்மால நண்பன் அகித்தோப்பேல் தற்கொலை செய்து கொண்டான். தகப்பனுக்கு விரோதமாய் எழும்பிய அப்சலோமும் பரிதாபமாக மரித்தான்.

கழுகு ரகம் (ஏசாயா 40)
இஸ்ரவேல் மக்கள் பல முறை எச்சரிக்கப்பட்டும், மெய்யான தேவனை விட்டு விட்டு, வேறு தெய்வங்கள் பின் சென்றததால் இறுதியில் சிறைக் கைதிகளாக அவர்கள் அந்நிய நாட்டிற்குச் செல்லும் அவல நிலைமை ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழலில் "என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று. என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது" என்று அவர்கள் தேவனிடம் முறையிடுகிறதை இங்கு காண்கின்றோம். மேலும் பிணைக் கைதிகளாக கஷ்டப்பட்ட‌ அவர்கள் சரீரத்திலும், ஆத்துமாவிலும் சோர்ந்து போனதால், அவர்களைப் பார்த்து மனமிரங்கி கர்த்தர் இவ்விதம் சொல்கின்றார்: "பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." (ஏசாயா 40: 28-31)

சிறையிருப்பின் காலத்தில் வாழ்ந்த‌ தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ இந்த வாக்குத்தத்தங்களை தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். அவர்கள் சாதாரணமான உணவை உண்டாலும் மற்றவர்களைக் காட்டிலும் முகக் களையும், சரீர புஷ்டியும், சிறப்பான ஞான வரமும் பெற்றிருந்தனர். தேவனிடத்தில் வைத்த பக்தியின் நிமித்தம் சிங்க கெபிக்கும், அக்கினிச் சூளைக்கும் செல்ல நேரிட்டாலும் பாதிக்கப்படாதவர்களாக இருந்தார்கள். பிணைக் கைதிகளாக சென்ற‌ அதே நாட்டை ஆள்பவர்களாக மாறினார்கள். எதிரி எல்லையில் கழுகைப் போல சிறகடித்துப் பறந்தார்கள்.

தன் பழைய சிறகுகளையெல்லாம் ஒவ்வொன்றாக தானே பிடிங்கி எடுக்கும் ஒரு வேதனையான அனுபவத்திற்கு பின்னரே ஒரு கழுகின் பெலன் கூடுகின்றது. அது போலவே நமக்கு இன்பம் உண்டாக்கும் பாவங்களை விட்டு விடுவது வேதனையாய்த் தோன்றினாலும், அதுவே நமக்கு புது பெலனை அளிக்கும். தாவீது மற்றும் மேற்சொல்லப்பட்ட வாலிபர்கள் ‍ தங்கள் பாவ வாழ்வை அறிக்கையிட்டு (சங்கீதம் 51, தானியேல் 9) கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, அவரிடம் மன்றாடினது தான் இவர்கள் தங்கள் வாழ்வின் அதிர்ச்சி சூழ்நிலைகளிலிருந்து மீள வழி செய்தது. கர்த்தரிடத்தில் மன்னிப்பு பெற்று, ஜெபித்து அவர் வேளைக்காய் காத்திருக்கும் போது கழுகுக்கு சமானமாய் நமக்கு பெலன் கிடைக்கும். (சங்கீதம் 103:1-5)

என் வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படுகின்ற‌ மன அதிர்ச்சியை நான் எவ்வாறு மேற்கொள்ளுகின்றேன்? புறா போல் ஓடி ஒளித்துக் கொள்ளுகின்றேனா? அல்லது கழுகைப் போல செட்டை அடித்து பறக்கின்றேனா?

2 comments:

  1. Indeed en eye-opener. Bible has all potential to solve our every day problem. Bible teaches us how to face trouble and over come it. Bible shows ways to lead our life in the midst of pain and pleasure but with God. Thanks a lot Grace.

    ReplyDelete