Friday, June 7, 2013

நகரம், நரகம், நான்!

நகரம் என்பது நரகம் போன்றது என்று கருதுவது சரியா? நகரத்தில் வாழும் நான் என்ன செய்ய வேண்டும்? நம் நாட்டின் தலைநகரில் நடைபெற்ற பாலியல் பலாத்கார செய்தியைக் கேட்ட போது என்னுள்  ஒரு கேள்வி எழுந்தது. உடலை மறைக்கத் துணியும், உடனடி மருத்துவ உதவியும் தேவையான நிலையில் இப்பெண்  கதறிய போது ஏன் பலர் உதவாமல் ஒதுங்கிச் சென்றனர்? குளிரில் அவர்கள் உள்ளமும் உறைந்து கல்லாகிப் போய் விட்டதோ?

வேதத்திலுள்ள சட்டப் புத்தகம் சொல்லும் ஒருக் காரியம் என்னவென்றால், கிராம புறங்களில் நடைபெறும் பாலியல் குற்றங்களில் சம்பந்தப்பட்ட ஆண் மாத்திரமே தண்டிக்கப்படுவான். அதேக் குற்றம் நகரத்தில் நடைபெறும் போது ஆண், பெண் இருவருமே தண்டிக்கப்படுவர் . பட்டணத்தில் பெண் ஒருவள் கூக்குரலிடும் போது யாராவது வந்து உதவும் வாய்ப்பு உள்ளது . இருவரும் தண்டிக்கப்படும் போது, பெண் உதவிக்காக குரல் கொடுக்கவில்லை. இருவரும் குற்றத்தில் உடந்தை என்று பொருள். (உபாகமம் 22:23- 27). ஆபத்தில் ஒருவர் கதறும் போது, மற்றவர் உதவ வேண்டும் என்று அதிகம் பேர் வசிக்கும் நகர்புறங்களில் வாழ்வோரின் பொறுப்பை இவ்வசனங்கள் உணர்த்துகின்றது அல்லவா?

சோதோம் நகரம் பாலியல் ஒழுக்கக் கேடுகளுக்காக மட்டும் அழிக்கப்படவில்லை. "இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; …சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை" (எசேக்கியேல் 16: 49) என்னும் வசனம் சோதோம் மகா நகர்வாசிகளின் பாவங்களை விவரிக்கின்றன.  பத்து நீதிமான்கள் இல்லாததால் சோதோம் நகரம் அழிக்கப்பட்டது. 

சோதோமில் பத்து நீதிமான்களைத் தேடின ஆண்டவர், எருசலேம் பட்டணத்தில் ஒரே ஒரு நல்ல ஆத்துமாவை தேடுகிறதைக் காண்கின்றோம்."நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்." (எரேமியா 5:1) ஆபிரகாம், சோதோம் பட்டண மக்களுக்காக கெஞ்சி மன்றாடியது போல அழிந்து போகும் மக்களை பாதுகாக்க கர்த்தர் தமது அநாதித் தீர்மானத்தின்படி ஆபிரகாம் போன்றோரை இன்றும் வைத்துள்ளார்.  

ஆனால் ஒரு நகரம் அழிவிலிருந்து காப்பாற்ற‌ப்பட ஜெபித்தால் மட்டும் போதாது. நம்மில் பலர் நகரங்களில் வாழ்வதை விட சிற்றூர்களிலும் கிராமங்களிலும் வாழ்வதே சிறந்தது என்று எண்ணுவது போல‌வே நெகேமியாவின் காலத்திலும் மக்கள் எண்ணினர். எனவே பத்தில் ஒருவரை எருசலேம் நகரில் வாழ குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் சூழல் ஏற்பட்டது. எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்தவர்களை ஜனங்கள் வாழ்த்தினார்கள் என்று வேதம் கூறுகின்றது (நெகேமியா 11:1‍‍-2). தேவனுடைய பிள்ளைகள் நகரங்களில் வாழ வேண்டியதன் அவசியத்தை இதன் வாயிலாக நாம் அறியலாம்.

நகரங்களில் வாழத் தீர்மானிப்பது முக்கியமானது.  அங்கு நல்லவர்களாக, உதவும் கரங்களாக வாழ்வது அதை விட முக்கியமானது.
நகரங்களில் அதிகம் பேர் வாழ்வதனால் தேவன் நகரங்களை அதிகம் நேசிக்கிறார். "வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ" என்பதே இன்று பெருநகரங்களைக் குறித்த இறைவனின் நாடித்துடிப்பு ஆகும்!

நாம் எந்த இடத்தில் வாழ வேண்டும் என்று நிர்ணயித்த தேவன் (அப்போஸ்தலர்  17:26), நகர்வாசிகள் எப்படி வாழ வேண்டும் என்று கற்றும் கொடுத்துள்ளார்.  பரலோகம், புதிய‌ எருசலேம். அது பரிசுத்த நகரம். அதை நாடும் ஒருவரின் பொறுப்பு என்ன? நரகத்தை நோக்கி அறியாமல் நடைபோடும் நகர மக்களுக்கும், உண்மையாகவே உதவி நாடுவோருக்கும் நாம் செய்யத் தவறியது என்ன? இனி செய்ய வேண்டியது என்ன?

இயேசு...நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுதார். (லூக்கா 19:41)

"...பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்" (எரேமியா 29:7)

No comments:

Post a Comment