Tuesday, June 25, 2013

"நான் ஆவிக்குரியத் திருச்சபைக்குச் செல்கின்றேன்!"

"நான் ஆவிக்குரியத் திருச்சபைக்குச் செல்கின்றேன்! நீங்கள் செல்வது ஆவிக்குரியத் திருச்சபை இல்லை" ‍‍என்பது கிறிஸ்தவ உலகில் நாம் அதிகம் கேட்கும் வார்த்தைகள் ஆகும். போதகர் ஒருவர் எனது உறவினர் திருமணமொன்றில் இவ்வாறுக் கூறக் கேட்டது என் மனதில் ஒரு உறுத்தலை உண்டாக்கியது: “மணமகனும், மணமகளும் ஆவிக்குரிய திருச்சபைக்கு செல்வது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.” அப்போதகர் மோதிரம் மாற்றி மாலை அணிவிக்கும் முந்தின நாள் நிகழ்வை நடத்த முன் வரவில்லை. ஆனால் அதிகம் நகைகளை அணிந்துக் கொள்ளும் கலாச்சாரமுடைய‌ அக்குடும்பங்கள் வாராவாரம் இப்போதகரின் சபைக்குச் செல்வதில் இவருக்கு ஆட்சேபணை ஒன்றும் இல்லாதது எனக்கு வியப்பை அளித்தது. ஆவிக்குரிய திருச்சபை என்ற வார்த்தைகள் என்னை ஆட்டிப்படைத்த நிலைமையில் மற்றொரு திருச்சபையில் நான் கேட்ட செய்தி எனக்கு வேண்டிய விளக்கத்தை தர ஏதுவாக இருந்தது.

வேதம் எதைக் குறித்து சொல்கின்றது? ஆவிக்குரியத் திருச்சபையா? ஆவிக்குரிய நபரா? ஆவிக்குரிய நபரைக் குறித்தே வேதம் ரோமர் 8 ல் விலாவாரியாக சொல்கின்றது. "மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்," என்று நபர்களைத் தான் வேதம் இரண்டு பிரிவாக பிரிக்கின்றது (வ. 5).

ஆவிக்குரிய நபர் யார்? 
1. ஆவிக்குரிய நபர்கள், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்கள். அவர்க‌ளுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.(வ.1).

2. ஆவிக்குரிய நபர்கள் தேவனுக்குப் பிரியமாயிருப்பார்கள். “மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். ஆவிக்குப்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருப்பார்கள்.” (வசனம் 8).

3. ஆவிக்குரிய நபர்கள் தேவனுடைய பிள்ளைகள். “மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறார்கள்.” (வ.14)

4. ஆவிக்குரிய நபர்கள் கிறிஸ்துவின் பாடுகளுக்குப் பங்காளிகள். “நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.” (வ.17)

5. ஆவிக்குரிய நபர்களைக் கிறிஸ்துவின் அன்பினின்று எவரும், எதுவும் பிரிக்க இயலாது. “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது.” (வ. 36, 38)

மேற்கூறிய வழிகளில் ஒருவர் ஆவிக்குரியவராக வாழ‌த் திருச்சபை உதவக் கூடுமே தவிர, போதகரோ, மற்றவரோ தாங்கள் ஆவிக்குரியத் திருச்சபையை சார்ந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்வது தவறானதாகும். உண்மை என்னவென்றால், வேதம் கூறும் ஆவிக்குரிய நபர்கள் /போதகர்கள் பல திருச்சபைகளில் பரவி இருக்கிறார்கள். ஆவிக்குரிய நபராய் வாழ்ந்து, ஆவிக்குரிய நபர்களைக் கண்டறிந்து, அவர்களோடு சாவகாசம் வைப்பதே கண்களால் காணக் கூடாத‌ "ஆவிக்குரியத் திருச்சபையில்" நாம் வைக்கும் ஐக்கியமாகும்!


4 comments:

  1. மோதிரம் மாற்றும் வரை அங்கே இருந்து காணிக்கையை வாங்கிக்கொண்டு, யாரையாவது வைத்து மோதிரம் மாற்றிக்கொள்ளுங்கள் என்று சாப்பிடச் செல்லுகிறார் அந்த போதகர். மறு நாள் இந்த குடும்பங்கள் ஆவிக்குரிய சபைக்கு செல்லுகிறவர்கள் என்று மார்தட்டிக்கொண்ட இவர், ஒரே கூச்சலும் கத்தலுமான, அவபக்தியான நேரத்துக்குப்பின், யாரையாவது வைத்து தாலியை கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு மறுபடியும் கனமான கவருடன் சாப்பிடச் செல்லுகிறார் தன் குடும்பத்தினருடன். யாரையா ஆவிக்குரியவன்?
    உள்ளம் குமுறுகிறது, எது ஆவிக்குரியது, எது மாம்சத்துக்குரியது என்று இனம் காணமுடியாத இந்த வெகுளியான குடும்பங்களை நினைத்து...

    ReplyDelete
  2. i think he is not a Pastor....he is serving for money....he is not serving for God's kingdom....

    ReplyDelete
  3. We are the living sprit. He is living with us madam

    ReplyDelete